கொழும்பு மாநகர சபையில் தமது கட்சியே ஆட்சியமைக்கும் என ஆளுந்தரப்பும், பிரதான
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் அறிவித்து வருவதால் கொழும்பு அரசியல்
களம் பெரும் பரபரப்பாகக் காணப்படுகின்றது.
இலங்கையிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் கொழும்பு மாநகர சபை பிரதான சபையாகக்
கருதப்படுகின்றது.
உள்ளூராட்சி சபை
இம்முறை நடைபெற்ற தேர்தலில் அந்தச் சபையில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்
பெரும்பான்மைப் பலத்தை எந்தவொரு கட்சியும் பெறவில்லை.
ஆட்சியமைப்பதற்கு 59 ஆசனங்களைப் பெற வேண்டிய நிலையில் தேசிய மக்கள் சக்தி வசம்
48 ஆசனங்களே உள்ளன. சில கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களும் தேசிய மக்கள்
சக்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனையடுத்தே கொழும்பு மாநகர சபையில் தமது கட்சி ஆட்சியமைப்பது உறுதி என்று
தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
வாக்கெடுப்பு
கொழும்பு மாநகர சபையில் 29 இடங்களைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, 13
இடங்களைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி , 5 இடங்களைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, 4 இடங்களைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட
தரப்புகளின் ஆசியுடன் ஆட்சியமைக்க முயற்சித்து வருகின்றது.
இந்நிலையில் தமது அணிக்குப் பெரும்பான்மைப் பலம் உள்ளது என்று கொழும்பில்
நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரைத் தெரிவு செய்வதற்குரிய
வாக்கெடுப்பு எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
