Home இலங்கை அரசியல் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுத் துறையினரா.! கம்மன்பில விளக்கம்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுத் துறையினரா.! கம்மன்பில விளக்கம்

0

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இலங்கையின் அரசப் புலனாய்வுத் துறையினர் செயற்பட்டதாக கூறுவது முற்றிலும் போலியான ஒரு குற்றச்சாட்டு என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் (28.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக இலங்கை அரச புலனாய்வுத் துறையினர் திட்டமிட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்தியதாக ‘செனல் 4’ சுட்டிக்காட்டியிருந்தது.

அரசியல்வாதிகளின் கடமை

‘செனல் 4’ என்பது தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்த ஜக்கிய இராச்சியத்தின் ஒளிப்பரப்புக் கூட்டுத்தாபனம் என்பதோடு அது இதுவரை காலமும் இலங்கைக்கு எதிரான அணுகுமுறைகளையும் கடைப்பிடித்து வந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இராணுவம் தவிர கோட்டாபய இராஜபக்ச மீதும் செனல் 4 பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அவை இப்போது நமக்கு தேவையில்லை.

கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நாம் முன்வைத்தமைக்காக அவர் என்னையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவையும் அமைச்சரவையிலிருந்து துரத்தியதோடு அவர் எழுதிய புத்தகத்திலும் எங்களை சாடியிருந்தார். ஆகவே, அவரை காப்பாற்ற நாம் முன்வர மாட்டோம்.

எனினும், நாட்டினுடைய உளவுத்துறையினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அவர்களை காப்பாற்றுவது அந்நாட்டினுடைய அரசியல்வாதிகளின் கடமையாகும்.

பொய்யான குற்றச்சாட்டு

2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் சஹ்ரான் ஆகியோர் புத்தளத்தில் உள்ள சஹ்ரானின் வீட்டில் வைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டதாக அஸாத் மௌலானா எனப்படுபவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் குறித்த வீட்டை சோதனையிட்ட போது, வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன்போது, கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 2018ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலேயே இந்த வீடு கட்டப்பட்டதாக தெரியவந்தது.

எனவே, அரசப் புலனாய்வுத் துறையின் மீது அஸாத் மௌலானா முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என இதிலிருந்து தெரிய வருகின்றது” எனக் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version