ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கு சட்டமா அதிபர் (Parinda Ranasinghe) பாரிந்த ரணசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃபிரேஞ்ச்சுடன் (Mark Andrew French) இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் தமது அதிருப்தியை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட வேண்டிய பதில் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் (Volker Türk) அறிக்கைக்குப் பதிலளிக்கும் இலங்கை அரசின் முழு அறிக்கையின் ஒரு பகுதியாகச் சட்டமா அதிபரின் பதில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத ஆரம்பத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், சட்டமா அதிபர் திணைக்களம் நீதிக்கு ஒரு தடையாக இருப்பதாகவும், கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கு தொடுநர் அலுவலகத்தை உறுதி செய்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
