அநுர அரசின் அனுசரணையுடன்தான் பாதாளக் குழுக்கள் இயங்குகின்றன. இந்த அரசின்
கட்டளைக்கமையவே பாதாளக் குழுக்கள் செயற்படுகின்றன. இனந்தெரியாத நபர்களால்
சுட்டுக்கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பு என்று
குறிப்பிடுவது அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று(4) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பகிரங்கக் குற்றச்சாட்டு
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“அநுர அரசுக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள
பேரணியில் நாங்கள் பங்கேற்போம்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகல
எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு.
அரசின் போலியான வாக்குறுதிகளால் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த அரசியல் கட்சிகள் வாய்ப்பு ஏற்படுத்திக்
கொடுக்க வேண்டும்.
அரசியல் கொள்கை வேறுபாடு என்று குறிப்பிட்டுக் கொண்டு
பேரணியில் கலந்துகொள்ளாமல் இருப்பது முறையற்றது.
அநுர அரசின் அனுசரணையுடன்தான் பாதாளக் குழுக்கள் இயங்குகின்றன.
இனந்தெரியாத
நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் பாதாளக் குழுக்களுடன்
தொடர்பு என்று குறிப்பிடுவது அரசின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது.
பாதாளக்
குழுக்கள் இந்த அரசின் கட்டளைக்கமையச் செயற்படுகின்றன. அரசு குறிப்பிடும்போது
துப்பாக்கிச்சூடுகள் இடம்பெறுகின்றன.
பாதாளக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் காரணமாகவே துப்பாக்கிச்சூட்டுச்
சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
குறிப்பிடுவது தேசிய பாதுகாப்பின் பலவீனத்தையே வெளிப்படுத்துகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
