யாழ்ப்பாணத்தில் (Jaffna) வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (20.1.2025) காலை 10.30 மணியளவில் யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூதியின் முன்றலில் இடம்பெற்றுள்ளது.
இதன் பொழுது வேலை வேண்டும் வேலை வேண்டும் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும், படித்தும் பரதேசிகளாக இன்றும் தொடரும் அவலம், பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன
பிரியோசனம் என்றவாறு பல கோஷங்களை எழுப்பிய வண்ணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு
படுகொலை நினைவுத்தூபியில் இருந்து யாழ். நகரினூடாக ஆளுநர் அலுவலகத்திற்கு
சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைவாய்ப்பு வெற்றிடம்
இதன்பொழுது கருத்து தெரிவித்த வட மாகாண பட்டதாரிகள் சங்க தலைவர், இன்று
பல்வேறுபட்ட திணைக்களங்களில் வட மாகாணத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடம்
காணப்படுகின்றது.
அந்த வேலைவாய்ப்புக்கள் எமது பட்டதாரிகளுக்கு
வழங்கப்படவேண்டும். இதேவேளை இன்று இந்த கல்வி திட்டத்தின் ஊடாக முறையான தகுதி
திறனை நாம் கொண்டிருக்கின்றோம். எமக்கு வேலைவாய்ப்பு வழங்கபடவில்லை எனில்
அதற்கு முழுப் பொறுப்பும் இந்த கல்வி திட்டத்தினை கொண்டிருக்ககூடிய அரசினதே
ஆகும்.
எம்மால் கடந்த முறை சுத்திகரிப்பு தொழிலாளர் வேடமிட்டு போராட்டம்
நடத்தப்பட்டமை தொடர்பில் பலர் சமூக ஊடகங்களில் எமக்கு எதிராக பிரசாரங்களை
முன்னெடுத்தனர். எமக்குள்ளும் பல கூலி தொழிலாளிகள் இன்று காணப்படுகின்றனர்.
எமது பெற்றோர்களும் பல கூலி தொழில்களை முன்னெடுத்து வியர்வை சிந்தியே இந்த
இடத்திற்கு எம்மை கொண்டு வந்தார்கள். கூலி தொழில் சுத்திகரிப்பு தொழில்
நகைப்புக்குரிய தொழில் அல்ல. இலங்கை அரச கட்டமைப்பின் பட்டபடிப்பு மூலம் நாம்
பெற்றது என்ன அரிசிற்கு அழுத்தம் கொடுக்கவே நாம் இவ்வாறாக ஈடுபட்டோம்.
முற்றுகையிட்டு கோரிக்கை கடிதம்
இது
தொடர்பில் அன்றைய போராட்டத்தின் பொழுதே முழுதெளிவினையும் வழங்கியிருந்தோம்.
இன்றைய தினமும் எமது அறவழிப்போராட்டம் வீதியூடாக கோஷங்களை எழுப்பி ஆளுநர்
அலுவலகத்தினை முற்றுகையிட்டு கோரிக்கை கடிதம் ஒன்றினை வழங்கவுள்ளோம்.
அரசாங்கம் உருவாகி நான்கு மாதங்களே கடக்கின்றது. எமக்கான பதில் அழுத்தம் மூலமே
கிடைக்கபெறுமானால் அதனை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம் என அவர் மேலும்
தெரிவித்தார் .
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் ஆரம்பமாக குறித்த போராட்டம்
யாழ். நகரத்தின் ஊடாக பயணித்து ஆளுநர் அலுவலகத்தை வந்தடைந்தது.
இதன் போது போராட்டக்காரர்கள் ஆளுநரை சந்திக்க முற்பட்டனர். இருப்பினும்
ஆளுநரின் செயலாளர் ஒருவர் குறித்த போராட்டக்காரர்களை சந்தித்து நான்கு பேர்
மாத்திரம் ஆளுநருடன் பேச முடியும் கோரிக்கை மகஜர் கையளிக்க முடியும் என
தெரிவித்தார்.
தமக்கு அரசாங்க வேலை பெற்றுத் தருவேன் என உறுதியளிக்க வேண்டும் என கோரிக்கை
விடுத்தனர்.
காவல்துறையினருடன் தர்க்கம்
அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் வீதியை மறிக்க முற்பட்டதால் காவல்துறையினருடன்
தர்க்கம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து குறித்த சிலரை ஆளுநர் பேசுவதற்கு
அழைத்தார்.
போராட்டக்காரர்களைச் சந்தித்த ஆளுநர் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனை நாடு
முழுவதும் இருப்பதாகவும் இது தொடர்பான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டு அது
தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்ததாக குறிப்பிட்டார். இதனை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து
சென்றனர்.
செய்திகள் – பிரதீபன்