Home முக்கியச் செய்திகள் ஈழ மக்களின் வரலாற்றில் மறக்கவியலாத யாழ் இடப்பெயர்வு…

ஈழ மக்களின் வரலாற்றில் மறக்கவியலாத யாழ் இடப்பெயர்வு…

0

Courtesy: தீபச்செல்வன்  

உலகில் ஒரு நாளில் ஐந்து இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்த பேரவலம் மிகுந்த நாளாக யாழ் (Jaffna) இடப்பெயர்வு கருதப்படுகிறது.

அலைதலாலும் உலைதலாலும் ஈழத் தமிழ் இனம் பெரும் இடர்களை வரலாறு முழுவதும் சந்தித்திருக்கிறது.

தம் சொந்த நிலத்தில் உரிமைகளுடனும் கௌவரத்துடனும் நிமிர்ந்து வாழப் போராடிய ஈழத் தமிழினம் தம் சொந்த மண்ணில் இருந்து பிடுங்கி எறியப்பட்ட கொடூரமாக யாழ் இடப்பெயர்வு அமைந்திற்று.

கடலில் வாழ்கிற மீனை தரையில் தூக்கி வீசினால் அது எப்படி துடிதுடித்து இறக்குமோ அதுவே இடப்பெயர்வில் நிகழ்கிறது.

நிலத்தின் உரிமைகளுக்காக போராடிய ஈழத் தமிழினம் அந்த நிலத்தை போர் என்ற இனவழிப்புச் செயலினால் இழந்த துயர் படிந்த நினைவு இது.

உலகின் நீண்ட இடப்பெயர்வு

வரலாறு முழுவதும் ஈழத் தமிழ் மக்கள் பல்ல இடப்பெயர்வுகளை சந்தித்துள்ளனர். அவற்றில் மிகப் பெரிய அவலத்தை கண்ணீரை இழப்பை சுமந்த இடப்பெயர்வாக யாழ் இடப்பெயர்வு கருதப்படுகின்றது.

உலக வரலாற்றில் கூட ஒரே இரவில் ஐந்து இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்த வரலாறுகள் இல்லை. சிங்களப் பேரினவாத அரசின் தமிழின ஒடுக்குமுறை மாபெரும் இனவழிப்புப் போராக நிகழ்த்தப்பட்டது.

யாழ்ப்பாணக் குடாநாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. எனினும் பலாலி, காங்கேசன்துறை முதலிய இடங்களில் சிங்கள இராணுவ முகாங்கள் இருந்தன.

இந்த நிலையில் ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்தையும் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்ற சூரிய கதிர் நடவடிக்கையை சிங்கள அரசு துவங்கியது. அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டு போரைத் துவங்கினார்.

1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதி சூரியக் கதிர் இனவழிப்பு நடவடிக்கை துவங்கியது. இலங்கை இராணுவ தளபதிகள் ரொஹான் தளுவத்த, ஜானக பெரேரா ஆகியோர் தலைமையில் துவங்கிய சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கையில் 20,000 சிங்கள இராணுவம் தமிழர்கள் மீது படையெடுத்தது.

அத்துடன் விமானப் படை, கடற்படையும் இணைந்து யாழ் குடா நாட்டை வளைத்துத் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

சூரியக்கதிர் நடவடிக்கையெனும் போர்

சூரியக் கதிர் நவடிக்கையின் உச்சமாக யாழ் இடப்பெயர்வு கருதப்படுகிறது. ஒக்டோபர் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் சாதாரணமான ஒரு நாளாக விடிந்தபோதும் அன்றைய இரவு ஒரு பெரும் துயரத்தை பெருக்கிய பொழுது ஆகிற்று.

தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருப்பதாகவும் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படாது என்றும் மக்கள் நம்பியிருந்த தருணத்தில் விடுதலைப் புலிப் போராளிகள் யாழ்ப்பாணத்தை விட்டு மக்களை வெளியேறுமாறு அறிவித்தார்கள்.

ஒலிபெருக்கியில் யாழ் மண்ணை விட்டு வெளியேறக் கேட்டு புலிகள் அறிவித்த அந்தக் குரல் இன்னமும் கேட்பதைப் போலத்தான் இருக்கிறது.

திடுக்குற்ற மக்கள் எதை எடுப்பது? எங்கு போவது எனத் தெரியாமல் அல்லாடினர்.

கைகளில் கிடைத்த பொருட்களை தூக்கியபடி, உறவுகளை கையில் பிடித்தபடியும் இடம்பெயரத் தொடங்கினர். “

பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் தெரியாமல், இங்கு சாகும் வயதினில் வேரும் நடக்குதே தங்குமிடம் தெரியாமல் கூடு கலைந்திட்ட குருவிகள் – இடம் மாறி நடக்கின்ற அருவிகள்..” என இந்த இடப்பெயர்வை கவிஞர் புதுவை இரத்தினதுறை பாடியிருக்கிறார்.

யாழ்ப்பாண மண் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது. யாழ் நிலமே உதிர்ந்த நாள் அது.

விட்டு வரப்பட்ட உறவுகள்

அப்போது யாழ்ப்பாணத்தில் சுமார் ஐந்து லட்சம் மக்கள் வசித்து வந்தார்கள்.

யாழ் குடா நாட்டு மக்களை வடமராட்சி, தென்மராட்சி மற்றும் வன்னிப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்லுமாறு புலிகள் அறிவித்தனர்.

இரண்டு சிறு வீதிகளால் ஐந்து லட்சம் மக்களும் அடியெடுத்து வைக்க முடியாமல் திணறினர். அழைத்துச் செல்ல முடியாமலும் வர விரும்பாமலும் வீடுகளில் முதிய உறவுகளை விட்டு வந்த கதைகளும் நடந்தன.

அதேபோல இடம்பெயரும் வழியில் துயரம் தாங்க முடியாமல் உயிரை விட்டு இறந்தவர்களும் அவர்களை கைவிட்டு வந்த கதைகளும் நடந்தன. உறவுகளை, உயிர்களை தொலைத்த கொடும் பயணம் அது.

கைதடி – நாவற்குழி வழியில் உள்ள இரண்டு பாலங்களிலும் மக்கள் செல்ல முடியாமல் பாலத்திற்குக் கீழால் சகதியில் புதையப் புதைய நடந்தனர்.

அந்தச் சகதியில் புதைந்து மாண்டவர்களை கைவிட்டு வர வேண்டிய துயரங்களும் நடந்தேறின.

மேலால் மழை. இன்னொரு பக்கம் குண்டுமழை. வானத்தில் விமானங்கள் தாக்கி மக்களை பதற்றத்தில் தள்ளின. ஒரு இரவை கொடும் இரவு ஆக்கியது சிங்களத்தின் போர். ஒரு வீதியை கொடும் வீதி ஆக்கியது பேரினவாதப் போர்.

திருப்புமுனையாக அமைந்த இடப்பெயர்வு

தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் யாழ் இடப்பெயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சிங்கள இராணுவத்தின் சூரியக் கதிர் நடவடிக்கைக்கு எதிராக முதன் முதலில் மரபு வழி இராணுவத் தாக்குதல்களை புலிகள் நிகழ்த்தினர்.

எவ்வொறினும் புலிகள் மக்களுடன் மக்களாக வன்னிக்கு பின்வாங்கினர். யாழ் இடப்பெயர்வு ஈழத் தமிழ் மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஈழவிடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை உணர்த்திய தாக்கம் மிகு ஆக்கிரமிப்பாகும்.

நாட் கணக்கில் நடந்த இடப்பெயர்வில்  தென்மராட்சி, வடமராட்சி, வன்னிப் பகுதியில் மக்கள் தஞ்சம் புகுந்தனர். இடம்பெயர்ந்த இடங்களிலும் சொல்லி மாள முடியாத துயரங்கள், இருக்க இடம் இல்லாமல் சிறிய கூடாரங்களிலும் மரங்களின் கீழாகவும் வெயிலிலும் மழையிலும் நனைந்து வாழ்ந்தனர் மக்கள்.

இடம்பெயர்ந்த இடங்களிலும் விமானத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு மக்கள் பலியெடுக்கப்பட்டனர். உணவுத் தடை, மருந்துத் தடையும் மக்களை காவு கொண்டது.

சிங்கள இராணுவத்தின் அறிவிக்கப்படாத இத்தகைய யுத்தங்களை எதிர்கொள்ளும் உபாயங்களை விடுதலைப் புலிகள் வகுத்தார்கள்.

இன்னமும் வீடு திரும்பாத மக்கள்

அந்தக் காலத்தில் மருத்துவம், நிவாரணம், மக்களின் வாழிட ஏற்பாடு, வீடமைப்பு போன்ற விடயங்களில் விடுதலைப் புலிகள் ஒரு அரசாக செயபட்டமையும் இங்கு நினைவுபடுத்த வேண்டியது.

மறுபுறத்தில் சிங்கள இராணுவத்திடம் சிக்கிய யாழ்ப்பாணம் கைதுகளாலும் கடத்தல்களாலும் திணறத் துவங்கியது. செம்மணிப் படுகொலைகளும் வல்லைவெளிக் காணாமல் ஆக்குதல்களும் யாழ்ப்பாணத்தை இருண்ட நகரம் ஆக்கியது.

2யாழ் இடப்பெயர்வுக்கு அடுத்து, முல்லைத்தீவை விடுதலைப் புலிகள் கைபற்றிய செய்தி அப்போது ஈழத் தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் சிறி லங்கா அரசுக்கு அச்சத்தை பெருக்கியது. உலகும் புலிகள் பக்கம் திரும்பிப் பார்த்தது.

அண்மையில் யாழ்ப்பாணத்தின் பலாலிக்கு சென்றிருந்தேன்.

அங்கு வீதியற்ற சில வீடுகள் இருந்தன. தூரத்தில் உருக்குலைந்த ஒரு வீட்டின் எச்சங்கள் கண்ணுக்குத் தென்பட்டன. அந்த வீட்டின் முற்றங்களிலிருந்து இராணுவத்தின் பெருவேலிகள் தொடங்குகின்றன.

உருக்குலைந்தபடி தெரிவதுதான் எங்கள் வீடு என்றனர் சனங்கள். அவர்களின் வீதியும் முற்றமும் இராணுவ முகாமிற்குள் உள்ளனர். அங்கே பல சனங்களின் வீடுகள் இராணுவ முகாமிற்குள் சிக்கி உருக்குலைகின்றன.

இன்னமும் இடப்பெயர்வால் வீடு திரும்ப முடியாத நிலையில் பல சனங்கள் உள்ளனர் என்பதற்குச் சாட்சியமாக அந்த வீடுகள் தெரிகின்றன.

யாழ் இடப்பெயர்வு நிகழ்ந்து 29 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும் இலங்கையில் பல ஆட்சிகள் மாறிவிட்ட பின்னரும் எம் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவே இல்லை. இதுதான் போரின் வழியாகவும் சாபமாகவும் நீள்கிறது.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு,
30 October, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

<!–


இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,

–>

NO COMMENTS

Exit mobile version