வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு
காண்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை உறுதியாக இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று(25.06.2025) வருகை தந்த அவர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச்
சந்தித்துப் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,
இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜெனீவா தீர்மானங்கள்
இதன்போது, மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும்
ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல்
இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக வோல்கர் டர்க் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறியுள்ளார்.
மேலும், மனித புதைகுழிகள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி
விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள்
தொடர்பாக குறித்த சந்திப்பில் பேசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மிக மோசமாக அரசாங்கம் நடக்காமல் இருப்பதற்கு ஜெனீவா தீர்மானங்களை தொடர்ந்து
முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்
ஆணையாளருக்கு வலியுறுத்தியதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சித்
தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து செம்மணி புதைகுழி உள்ளிட்ட நிலைமைகளை
நேரடியாக பார்வையிட்டதற்கு நாம் நன்றி கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் – ராகேஷ்
