Home இலங்கை அரசியல் தமிழர்களின் ஒருமித்த அரசியல் முகம் எதிர்கால நகர்வுகளை வலுவாக்குமா..!

தமிழர்களின் ஒருமித்த அரசியல் முகம் எதிர்கால நகர்வுகளை வலுவாக்குமா..!

0

Courtesy: uky(ஊகி)

தமிழ் மக்களின் ஒருமித்த அரசியல் முகம் என்பது பரந்த பொருள் பதிந்த சொற்றொடர் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகளவில் தமிழ் மொழி பயன்பாட்டில் இருந்து வருவதோடு இணையப் பயன்பாட்டிலும் தமிழ் மொழி பெரும் பங்கு வகிக்கின்றது.

தமிழ் மக்களின் ஒருமித்த அரசியல் முகம் என்பது உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் அரசியல் முகமாக இருக்கும்.அது ஒருமித்ததாக ஒரே மாதிரியானதாக மற்றொரு மொழி பேசுநரால் புரிந்து கொள்ளப்படுமளவுக்கு இருக்க வேண்டும்.

இது சாத்தியப்பாடான ஒன்று என்ற போதும் இன்று அப்படி இல்லை என்பது உண்மையே!
திருவள்ளுவரின் திருக்குறள் எப்படி உலக பொதுமறை என்ற வழக்கில் இருக்கின்றதோ அதன்பால் எப்படி தமிழரான திருவள்ளுவர் ஒரே மாதிரியாக எல்லா மொழி பேசுநர்களாலும் நோக்கப்படுகின்றாரோ அது போல் தமிழர் என்றால் அந்த பொது அரசியல் முகம் உணரப்பட வேண்டும்.அத்தோடு அது மதிப்புமிக்க ஒன்றாக இருக்க வேண்டும்.

இதுவரையான வரலாற்றுத் தகவல்களின் மூலம் தமிழர்கள் உலக அளவில் ஒரு பொது முகத்தோடு பல்வேறு துறைகளில் அறியப்பட்டுள்ள போதும் அரசியலில் அப்படி இனம் காணப்படவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.

மேலெழுந்தவாரியான பிரிவு 

உலக அளவில் பரந்து வாழும் தமிழர்களில் மேலெழுந்தவாரியான இரு பிரிவினரை நோக்க முடியும்.ஒன்று தமிழ்நாட்டுத் தமிழர்கள் மற்றையது ஈழத்தமிழர்கள்.

எந்தவொரு நாட்டிலும் குடியுருமையைப் பெற்றுவிட்டால் அந்த குடியுருமையை கொடுக்கும் நாடுகள் குடியுருமையினைப் பெற்ற தமிழர்களை தங்கள் நாட்டுப் பிரஜைகளாக மட்டுமே அதிகமான பொழுதுகளில் நோக்குகின்றன.

சில சந்தர்ப்பங்களில் மட்டுமே அவர்களது தாயகம் மற்றும் பேசும் மொழியினை கருதுகின்றன.ஆனால் தமிழர்கள் அவர்களை நோக்கும் போது தமிழ்நாட்டு தமிழர் மற்றும் ஈழத்தமிழர் என்று தான் நோக்குகின்றனர்.
இந்த பார்வைப் புலத்தினை நாம் இப்போதும் நம்மைச் சூழ நடக்கும் அன்றாட நிகழ்வுகளுக் கூடாக அறிந்து கொள்ள முடியும்.

மலேசியா, சிங்கப்பூர், யப்பான், இந்தோனேசியா போன்ற கீழைத்தேய நாடுகளில் அதிகளவில் வியாபித்திருக்கும் தமிழ் மக்களாக தமிழ்நாட்டுத் தமிழர்களே காணப்படுகின்றனர்.அதாவது அங்கெல்லாம் உள்ள ஈழத்தமிழரோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டுத் தமிழர்களே அதிகம் இருக்கின்றனர்.

வெளிக்காட்டப்படும் செயற்பாடுகள்

தொழில் நிமித்தம் சென்று வாழ்பவர்கள் ஒரு பிரிவினராக இருக்கும் போது பரம்பரையாகவே வாழ்ந்து வரும் தமிழர் மற்றொரு பிரிவினராக இருக்கின்றனர்.அவர்களை எல்லாம் இந்திய வம்சாவளி தமிழர்கள் என அந்த நாடுகள் அடையாளப்படுத்திக் கொள்கின்றன.

அது போலவே மேற்கத்தைய நாடுகளில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.தமிழ் நாட்டுத் தமிழர்களோடு ஒப்பிடும் போது ஈழத்தமிழர்களின் அளவு அதிகமே! அல்லது வெளிக்காட்டப்படும் செயற்பாட்டுத் துலங்கள் ஈழத்தமிழர்களுடையதாகவே இருக்கின்றது.

மற்றொரு வகையில் மத்தியதரை நாடுகளில் ஈழத்தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் அதிகமாக இருக்கின்றனர் என்பது இங்கே நோக்கத்தக்கது.

இங்கே இந்தியத் தமிழர்கள் என அழைக்கப்படும் தமிழர்களையே தமிழ்நாட்டுத் தமிழர்கள் என குறிப்பிட்டுப் பயணிப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இந்தியத் தமிழர்களில் தமிழ் நாட்டில் இருந்து வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்களே அதிகம் என்பதால் இவ்வாறு குறிப்பிட முயன்றதையும் குறிப்பிடுதல் வேண்டும்.

இந்த நிலையில் உலகெங்கும் பரந்துள்ள தமிழர்களின் ஒரு பொது இயல்பாக தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ளலும் தங்களின் கல்வியறிவை மேம்படுத்திக் கொள்ளலும் ஒருமித்தாக இருப்பதை அறிந்துகொள்ள முடியும்.

தமிழர்களின் அரசியல் முகம்

கல்வி மற்றும் தொழிலில் தமிழர்களின் ஆற்றல் தொடர்பில் அவர்களது பெயரைச் சொன்னால் வேற்று மொழி பேசுநருக்கு மதிப்புமிக்க உணர்வை ஏற்படுத்தி ஒரு முகப் பார்வையில் நோக்க வைக்கின்றது என்பது மலைமேல் விளக்காகும்.

ஆயினும் அவ்வாறு பரந்துள்ள தமிழர்களின் அரசியல் முகம் ஒன்றாக இல்லாது வேறுபட்டுக் கிடக்கின்றது என்பதும் மலைமேல் விளக்காகும்.

இந்த மாறுபட்ட அரசியல் முகம் மாற்றப்படும் போது ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இலகுவாக எதிர்கொண்டு வெற்றி கொள்ள முடியும் என்பதும் திண்ணம்.

ஒருமித்த அரசியல் முகம் உருவாக்கப்பட்டால் உலகின் எந்தவொரு மூலையிலும் தமிழர்கள் மதிப்புமிக்க ஒரு சமூகமாக மாற்றப்பட்டு சவால்களை இலகுவாக வெற்றி கொண்டு வாழும் இனமாக மாற்றம் பெற முடியும் என்பது ஒரு எதிர்வு கூறலாகும்.

தமிழர்களின் ஈழத்தனி நாட்டுக்கான உலக ஆதரவை பெறுதலும் இலகுவானதாக இருக்கும் என்றால் அது மிகையில்லை.

ஈழத்தில் உள்ள அரசியல் முகம்

ஈழத்தில் உள்ள தமிழர்களிடையே ஒருமித்த அரசியல் முகம் இல்லை என்பது கவலையளிக்கும் விடயமாகும்.

எனினும் இந்த நிலையை மாற்றி ஒருமித்த அரசியல் நிலையை உருவாக்கி விடுதல் தொடர்பில் இதுவரை எந்த தமிழ் தலைவர்களும் உருப்படியான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

இலங்கையில் உள்ள தமிழர்களின் ஒருமித்த அரசியல் முகம் என்பது வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களை மட்டும் முன்னுரிமையளித்து மேற்கொள்ளப்படும் செயற்பாடாக அமைந்து விடக்கூடாது.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களிடையே தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர் என்பது அவர்களும் தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்களிப்புக்களை வழங்கியிருக்கிறார்கள் என்பது கருத்திலெடுக்கப்பட வேண்டும்.

அது போலவே மலையகத் தமிழ் மக்களும் இந்த ஒருமித்த அரசியல் முகம் என்ற எண்ணக்கருவுக்குள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.

இது போலவே இலங்கையின் தலைநகரத் தமிழர்கள் என்ற மற்றொரு வகையினரையும் நோக்க வேண்டும்.அத்துடன் வடக்கு கிழக்கினுள் உள்ளடங்காத புத்தளம் வாழ் தமிழரும் உள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள்

இம் முயற்சிக்கு இலகுவான ஒரேயொரு வழிதான் உண்டு.தமிழ் அரசியல் தலைமைகள் தங்களுக்குள் ஒரு பொதுக் கொள்கை வகுப்பைச் செய்து கொண்டு அதன் வழியில் செயற்பட வேண்டும்.அப்படியொரு கொள்கை வகுப்பு அரசியல் தலைவர்களை மட்டுமல்ல இலங்கையில் வாழும் எல்லாத் தமிழ் மக்களையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வந்து நிறுத்தி வைக்கும்.

அவர்களது சுயாதீனமான செயற்பாடுகள் கூட பொது அரசியல் கொள்கையின் சார்பாக அமைந்து விடும்.இதனால் உலக நாடுகள் மத்தியிலும் இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் மத்தியிலும் ஈழத் தமிழர்கள் என்றால் இப்படித்தான் என்ற பொது அரசியல் முகம் தோற்றுவிக்கப்பட்டு விடும்.

இந்த முயற்சியின் விளைவாக இலங்கைத்தீவில் வாழும் எந்தவொரு தமிழருக்கும் தீங்கேற்படும் போது அதற்காக குரல் கொடுக்கும் வேளை அது வலுவானதாக இருக்கும்.அதுமட்டுமல்லாது தீங்கு விளைவிப்பதற்கான களச்சூழல் கூட இல்லாது போகும் நிலை வரலாம்.

பொது முகத்தோடு செயற்பட முனையும் ஈழத்தமிழர்கள் தங்கள் சமூகத்தின் கல்வி, பொருளாதார வளர்ச்சி மற்றும் தங்களின் நிலையான இருப்பு தொடர்பில் உறுதித்தன்மை நோக்கி நகர வேண்டும்.அப்போது தான் நிலையான தொடர்ச்சியான ஒரு கட்டமைப்பானது உருவாக்கப்படும்.

இந்த சிந்தனையோட்டத்தினை ஒரு கருதுகோளாக கொண்டு செயற்பட முனையும் போது தான் புதிதாக உருவாகும் சவால்களை அறிந்து அதனை எதிர்கொள்ள தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள அவர்களால் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது அரசியல் முகம் உருவாக்கப்படுவதற்கு தமிழர்களிடையே நிலவி வரும் பிரதேச வாதம், தமிழ் முஸ்லிம் விரோதப் போக்கு , பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதியியல் சச்சரவுகள் என்பவற்றுக்கான தீர்வுகளை காணும் பொருட்டு அவற்றால் தமிழ் பொதுத்தன்மைக்கு ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக அவற்றின் செயற்பாடுகளுக்கான வரையறைகளை உருவாக்கிக் கொள்வதோடு அவற்றை பேணிக் கொள்ளவும் தமிழர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

தமிழர்களிடையே நிலவி வரும் உட்பூசல்களை ஏற்படுத்தி விடக்கூடிய பிரச்சினைகளை முற்றாக நீக்கி விடுதல் அவ்வளவு எளிதானதல்ல.ஆயினும் அவற்றை ஒரு வரையறைக்குள் கொண்டுவந்து கட்டுப்படுத்தி தமிழ் பொதுத் தன்மையைப் பெற முடியும் என்பது உண்மையே!

ஈழத்தமிழர்களின் நாளைய இலக்கு என்ன?

இன்றைய அரசியல் சூழலில் ஈழத்தமிழர்களிடையே உள்ள மிகப்பெரிய கேள்வி அவர்களது நாளைய இலக்கு என்ன?

தனித்தமிழீழம் நோக்கிய பயணத்தில் இலக்கை அடைவதா?அல்லது ஒன்றிணைந்த இலங்கைக்குள் சமஸ்டி முறையிலான ஒரு தீர்வா? அல்லது ஏனைய உலக நாடுகளில் தமிழர்கள் வாழ்வது போல் இலங்கையிலும் சிங்கள அரசை ஏற்றுக்கொண்டு அதன் அரசாங்கங்களின் செயற்பாடுகளோடு இசைந்து தங்கள் சுயநிர்ணயத்தை பெற்று வாழ்ந்து போவதா? என்ற கேள்விகளுக்கான மிகச்சரியான பதில் என்ன என்றால் அதற்கு வெவ்வேறான பதில்கள் கிடைக்கும்.

ஈழத்தில் வாழும் தமிழர்களிலும் சரி உலகளவில் பரந்து வாழும் தமிழர்களிலும் சரி மேற்படி கேள்விகள் தொடர்பில் ஒரு பொதுவான முடிவுக்கு அவர்கள் இன்னமும் வரவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

தனித்தமிழீழம் நோக்கியதாக பயணிப்பது என கூறிக்கொண்டு செயற்பட்டுவரும் ஒரு பிரிவினரும் இலங்கைக்குள் தீர்வினை பெற்று வாழலாம் என மற்றொரு பிரிவினரும் என தமிழர்களிடையே பிரிந்து நிற்பது ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு சந்தோசம் என்பது போல இலங்கையில் ஈழத்தமிழர்களின் அரசியல் நகர்வு அமைந்து விடுகின்றன.

இந்த போக்கு ஈழத்தமிழரிடையே தோன்றி வளர்ந்து வரும் புதிய சந்ததியினருக்கு தெளிவற்ற ஒரு மன நிலையை உருவாக்கி விடும்.

தனித்தமிழீழம் தேவை என போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட சூழலுக்கும் இன்றுள்ள சூழலுக்கும் இடையே இலங்கையில் அதிகளவான அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழர்களின் இடங்களை ஆக்கிரமித்தல், சிங்கள மயமாக்கல் என சிங்கள தேசத்தின் தமிழர் விரோத போக்குகளுக்கு சிங்கள மக்களிடையே ஏற்படும் சனத்தொகை அதிகரிப்பை காரணம் காட்டி அதன் விளைவுகளால் இவை ஏற்பட்டுகின்றன.இவை திட்டமிட்ட புறக்கணிப்பல்ல என நியாயப்படுத்தும் சூழல் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வடக்குக் கிழக்கில் இப்போதுள்ள தமிழர்களின் போக்கு அவர்களது பாராளுமான்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட குறைத்துவிடும் அபாயம் இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

அதிகளவானவர்கள் புலம்பெயர்ந்து செல்லும் போது விகிதாச்சார தேர்தலில் மக்கள் தொகை குறையும் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்பிருக்கிறது.

2009 க்குப் பின்னரும் அதற்கு முன்னுள்ள களச்சூழல் போலவே சிந்தித்துச் செயற்படுதல் சமகால அரசியல் போக்கினை புரிந்து கொள்ளாத ஒரு நிலையாகவே கருத வேண்டியுள்ளது.

ஈழத்தமிழர்களின் நாளைய இலக்கு சரிவர தீர்மானிக்கப்படவில்லை என்றால் இந்த தலைமுறை இப்படியே காலத்தை கடந்து சென்று விடும்.தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டம் எமது அடுத்த சந்ததிக்கும் இப்போதுள்ள முறையற்ற நெறிமுறையின் வடிவத்துடனேயே கையளிக்கப்படும் நிலை உருவாகி விடும்.இது இலங்கையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழர்களின் அரசியல் முகத்திற்கான பொதுக் கொள்கை வகுப்பில் ஈழத்தமிழர்களின் நாளைய இலக்கு என்ன என்பதும் செல்வாக்குச் செலுத்தும் என்பது திண்ணம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் முகம் 

தமிழ்நாட்டு தமிழர்களின் அரசியல் தமிழகத்திற்குள்ளும் முழு இந்திய நாட்டுக்குள்ளும் ஒரு பொது அடித்தளத்திலேயே இருந்து வருகின்றது.

கட்சி அரசியலில் உள்ள முரண்பாடுகளும் தேர்தல் கால சண்டை சச்சரவுகளும் அவர்களது பொது அரசியல் அடித்தளத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி விடுவதில்லை என்பதும் இந்திய அரசியலை ஆய்வு செய்து பார்க்கும் போது தெளிவாக புலப்படும்.

ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியாவை மீறிய ஒரு அரசியல் அணுகலை தமிழ்நாட்டு அரசியல்களம் செய்ய முனையாது.அப்படி முனைய முயலும் போது இந்திய மத்திய அரசின் கட்டுப்பாடு இருக்கும்.ஆயினும் பொருளாதார அணுகலை அது கட்டுப்படுத்தும் சூழல் இருக்காது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அரசியல் கசப்புணர்வுகள் இன்றும் ஈழத்தமிழர்களின் அரசியலில் தாக்கம் செலுத்துவதை அவதானிக்கலாம்.

தமிழர்களின் பொது அரசியல் முகம் இந்த சவாலை எதிர்கொண்டு ஈழத்தமிழருக்கு அனுகூலமாகும் வாய்ப்புக்களை உருவாக்கி விட உதவும் என்பதும் கண்கூடு.

சுயநிர்ணய உரிமைப் போரின் வெற்றி 

இலங்கையில் தமிழர்கள் தங்களின் சுயநிர்ணய உரிமைகளை மீளவும் பெற்றுக்கொள்ள முன்னெடுத்த போராட்டங்கள் எல்லாமே தோல்வியில் முடிவடைந்துள்ளன.

அதுமட்டுமல்லாது மேலும் மேலும் தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் வண்ணமே இலங்கை அரசாங்கங்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இன்றும் கூட இலங்கையில் தமிழர் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலங்கள் பறிபோவதை தடுக்க முடியாத கையாலாகத்தனத்தோடு தான் அவர்களது அரசியல் பலம் இருக்கின்றது.

தமிழ் அரசியல்வாதிகளிடையே வலுவான ஒற்றுமையும் தமிழ் மக்கள் தொடர்பில் ஒரு பொது அரசியல் கொள்கை இல்லாததும் தான் இந்த பலமற்ற அரசியல் சூழலுக்கு காரணம்.

நீதிமன்றத் தீர்ப்புக்கள்

நீதிமன்றத் தீர்ப்புக்களை மீறிய சிங்கள மக்களின் செயற்பாடுகளைக் கூட கட்டுப்படுத்தாது சிங்கள அரசாங்கங்களின் செயற்பாடுகளைக் கண்டு கடந்து போகின்ற தமிழ் அரசியல் தலைவர்களின் பங்களிப்பு போக்கினையே நாம் கடந்த காலங்களில் பார்த்து வந்திருக்கின்றோம்.

சாதாரணமான ஒரு விடயமாக அடுத்தவரின் நிலத்தினுள் செல்வதற்கு அவரது அனுமதி வேண்டும் என்ற யதார்த்தம் கூட இலங்கையில் தமிழர்கள் சார்பில் நடைமுறைப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை என தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகளுக்கான குறைந்தபட்டச தீர்வுகளைக் கூட தேர்தல்களை இலக்காக கொண்டே வழங்கி வருகின்றனரோ என சந்தேகிக்கும் படி நிகழ்வுகள் பதிவாகி வருகின்றன.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போல தமிழ் அரசியல் தலைமைகள் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை விட்டு ஒற்றுமையோடு பயணிக்க முற்பட வேண்டும்.அதன் மூலம் தமிழர்களை ஒரு முகப்படுத்த வேண்டும்.தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை பாதுகாப்பதோடு இழந்தவற்றை மீட்டெடுப்பதற்கு தேவையானவற்றை செய்ய முற்பட வேண்டும்.

அதே நேரம் தங்களின் நாளைய இலக்கு தொடர்பில் தமிழ் இளம் தலைமுறையினரிடையே தெளிவான சிந்தனையை உருவாக்க முயல வேண்டும்.

இவற்றை விடுத்து அவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் அனைத்தும் நீர் மேல் எழுத்தாகிப் போகும் என்பதில் எந்த மாற்றமுமில்லை.

NO COMMENTS

Exit mobile version