Home இலங்கை சமூகம் காத்தான்குடியில் மாணவிக்கு நடந்த சொல்லொணாத துயரம்: வெளிப்பட்ட உண்மைகள்!

காத்தான்குடியில் மாணவிக்கு நடந்த சொல்லொணாத துயரம்: வெளிப்பட்ட உண்மைகள்!

0

பாடசாலை மாணவ நண்பன் ஒருவருடன் கதைப்பதை தவறாக சித்தரித்து தன்னையும் சக மாணவரையும் தாக்கி 15 வயது நிறைந்த தங்களை இஸ்லாமிய சரீஆ சட்டப்படி பள்ளிவாசலில் வைத்து திருமணம் முடிக்க முற்பட்ட அடிப்படைவாத சிந்தனையுடைய நபர்களுக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்தும் சட்டம் தனது கடமையை சரிவரச் செய்யவில்லை என்கிற முறைப்பாடு ஒன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

என்ன விடயம்?
15 வயது நிரம்பிய பாடசாலை செல்லுகிற மாணவர்களுக்கு ஏன் இந்த நிலமை எழுந்தது?
ஜபிசி தமிழ் தனது தேடலை தொடங்கியது.

ஆண் பெண் சமத்துவம் நிறைந்த சமூகத்தில் பெண் பிள்ளைகளும் கல்வி கற்று தொழில் செய்து உயர்ந்து நிற்கும் இந்தக் காலத்தில்தான் கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடியில் குறித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

15 வயது நிரம்பிய மாணவியொருவர் தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர்கள் தொலைவிலுள்ள வகுப்பிற்கு சென்று வருவது வழமை. அன்றும் வகுப்புக்களை முடித்துவிட்டு வீடு திரும்புகிறபோது வெளியூருக்கு சென்றிருக்கின்ற தனது பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பெடுப்பதற்காக தனது சக வகுப்பு மாணவரின் தொலைபேசியை வாங்கி வந்திருக்கிறார்.

குறித்த தெலைபேசியை மீளவும் வாங்கிச் செல்லுவதற்காக மாணவியின் வீட்டு நுழைவாயிலில் வந்து நின்ற மாணவனை கண்ணுற்ற அயல்வீட்டில் வசிக்கின்ற இன்னும் ஒரு மாணவனும் அவருடைய தந்தையும் அங்கு நின்ற இன்னும் சிலருமாகச்சேர்ந்து குறித்த மாணவர்களை தவறான கண்ணோட்டத்தில் சித்தரித்து துன்புறுத்தி அவற்றை ஒளிப்பதிவு செய்து அக் கிராமத்தின் பேசுபொருளாக மாற்றி இருக்கிறார்கள். இதுவே பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோருடைய வாதமாக இருக்கிறது.

அது மட்டுமல்ல முழங்காலிட்டு இருத்தி பள்ளிவாசலுக்கு அழைத்துச்சென்று அங்கு இஸ்லாமிய சரீஆ சட்டப்படி திருமணம் செய்துவைப்பதற்கு முயற்சித்திருக்கிறார்கள். 

இவ் விடயம் அறிந்த பெற்றவர்கள் காவல்துறையிடம் முறையிட்டு விடயம் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. ஆனாலும் அங்கும் தமக்கு முறையான நீதி கிடைக்கவில்லை. எதிர்த்தரப்பின் பணபலம் வென்றிருக்கிறது என்று வேதனையோடு விழிக்கிறார்கள்.

தன்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையினையும் சுமத்தப்பட்ட பழிச்சொல்லையும் ஏற்றுக்கொள்ள முடியாத 15 வயதுடைய குறித்த மாணவி தற்கொலை என்னும் தவறான முடிவெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சமூக பொறுப்புள்ள ஒரு ஊடகமாக இவ்வாறான சம்பவங்களை எப்படிக் கடந்து செல்லுவது?
யார் இவற்றிற்கு பொறுப்பு கூறவேண்டும்?
தனி நபர்களா?
சமூகமா?
பொறுப்புடைய அதிகாரிகளா?
யார்?
யார் பதிலுரைக்க வேண்டும்?

ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகள் என்று வேற்றுமைப்படுத்தி வளர்க்காது எல்லோரும் நமது பிள்ளைகளே என்கிற மனநிலையோடு சிறுவர்களை வளர்த்தெடுக்கின்ற சூழல் காலத்தின் தேவையாக இருக்கிறது.

தவிர பதின்ம வயதிலுள்ள இரண்டு பிள்ளைகள் சந்தித்து சாமானியமாக உரையாடுகிறபோது அவ் உரையாடலை பால்நிலை அடிப்படையில் மையப்படுத்திய உற்று நோக்குதல்களும் திருமணத்தை நோக்கி அழைத்தச்சென்ற பால்நிலை சமூக அடிப்படைவாத மனநிலையும் தனிநபர் பழி தீர்க்கும் படலமும் கண்டிக்கத்தக்கவை.

பெரியவர்களுடைய புரிதலற்ற இச்செயற்பாடுகளால் கல்வி கற்கின்ற இரண்டு பிள்ளைகளுடைய மனநிலை பாதிக்கப்டிருக்கிறது.
தற்கொலை முடிவுகள் எட்டப்பட்டிருக்கிறது. வைத்தியசாலையில் சிகிச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியிருக்கிறார்கள் என்கிற பெற்றவர்களுடைய முறைப்பாடு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும்.

மாவட்ட சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர்
மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவின் அதிகாரிகள்
நீதித்துறை ஆகியவை குறித்த விடயம் தொடர்பில் அதிக கவனமெடுக்க வேண்டும் என்பது பெற்றவர்களுடைய கோரிக்கை.

https://www.youtube.com/embed/h7wBRAEHeVc

NO COMMENTS

Exit mobile version