இலங்கையில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் தயாராகவுள்ள கல்வி மறுசீரமைப்புகளுக்காக கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்திற்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவ ஒத்துழைப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமரினால் அமெரிக்கத் தூதுவரிடம் வலியுறுத்தப்பட்டது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (24) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் சமாதானப் படையணி (Peace Corps) கல்வி மற்றும் கலாசார பரிமாற்றத் திட்டம் குறித்தும், ஏனைய ஒத்துழைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் தூதுவரினால் குறிப்பிடப்பட்டது.
சர்வதேச புலமைப்பரிசில்
மேலும் ஃபுல்பிரைட் (Fulbright) சர்வதேச புலமைப்பரிசில் பரிமாற்றத் திட்டத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான கல்விசார் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
சர்வதேச கல்வி மற்றும் கலாசார பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஃபுல்பிரைட் புலமைப்பரிசில் திட்டமானது, 160 இக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு கற்கை நடவடிக்கைகள், கற்பித்தல், ஆராய்ச்சி, கருத்துப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நாட்டின் மனிதவள அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகும் வகையிலான அறிஞர்களை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் இச்சந்திப்பில் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
