அமெரிக்காவால் “பரஸ்பர” வரிகள் என்று அழைக்கப்படும் வரிகள் விதிக்கப்படுவதாலும், அமெரிக்காவிற்கு எதிராக சீனாவின் பழிவாங்கும் வரிகளாலும் ஒரு வர்த்தகப் போர் தொடங்குவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பொருளாதார சக்திகள் ஒன்றுக்கொன்று சவால் விடுவது நிச்சயமற்ற காலத்திற்கு வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலை இழப்புகள்
உலக சமூகத்தின் தற்போதைய சரிவில் அதிகம் பாதிக்கப்படுவது இலங்கை போன்ற சிறிய நாடுகள் என்றும், ஒன்று அல்லது இரண்டு பொருட்களை ஏற்றுமதி செய்யும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுக்கு அமெரிக்கா முக்கிய சந்தையாக உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், ஏப்ரல் 2 ஆம் திகதிக்கு முன்பு இருந்த நிலைக்கு வரிகள் திரும்பாது என்றும், அது இலங்கையின் ஏற்றுமதிகளைத் தடுக்கும் என்றும், இதன் விளைவாக தொழிற்சாலை மூடல்கள் மற்றும் பெரிய அளவிலான வேலை இழப்புகள் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்திய சந்தையை அணுகுவதற்காக, இந்தியாவுடனான ECTA பேச்சுவார்த்தைகளை 3 மாதங்களுக்குள் முடிக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் தாய்லாந்து – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
