இலங்கையில் (Sri Lanka) மனித உரிமை மீறல்கள் குறித்த கடுமையான அச்சங்களை, அமெரிக்கா தனது 2024ஆம் ஆண்டுக்கான மனித உரிமை நடைமுறை நாடு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இதில், நீதிமன்றத்திற்கு வெளியே நிகழ்த்தப்படும் கொலைகள், காவல்துறைக் காவலில் ஏற்பட்ட மரணங்கள், செய்தியாளர்கள் மீதான மிரட்டல்கள் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2022 ஆம் ஆண்டு அரகலய மக்கள் போராட்டத்திற்குப் பிறகு, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி ஆட்சிக் காலம் இது எனினும், குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளை பொறுப்புக்கூறச் செய்வதில் அரசு மிகக் குறைந்த முயற்சிகளையே எடுத்தது என கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு சட்டம்
முக்கிய கண்டறிதல்களில், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மனித உரிமைகள் ஆணையம் பதிவு செய்த ஏழு காவல்துறை காவலில் ஏற்பட்ட மரணங்கள், வாக்குமூலம் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை சம்பவங்கள், மற்றும் விமர்சகர்களை கைது செய்வதற்காக பயங்கரவாத தடுப்பு சட்டம் (PTA) தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் அடங்கும்.
அமெரிக்கா மேலும், ஊடகச் சுதந்திரக் கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டி, வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் செய்தியாளர்கள் மீது இடம்பெற்ற தொந்தரவு, சர்வதேச குடிமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கைச் சட்டத்தின் கீழ் (ICCPR Act) செய்யப்பட்ட கைது நடவடிக்கைகள், மேலும் அரசின் பழிவாங்கல் அல்லது விளம்பர வருவாய் இழப்பின் அச்சத்தால் உருவாகிய தன்னடக்க பத்திரிகைத்துறை நிலைமை ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கை மேலும், தொழிலாளர் உரிமைகள் அமலாக்கத்தின் பற்றாக்குறை, புறக்கணிக்கப்பட்ட பெண்களிடம் பலவந்தமாக சத்திர சிகிச்சை (கருப்பை அகற்றல்) மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, மற்றும் போர் கால காணாமல் போனோர் வழக்குகள், மனிதப் புதைகுழி விசாரணைகள் மிகவும் மெதுவாக முன்னேறுவது ஆகியவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பாதுகாப்பு படையினரின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நீதிமுறை நடவடிக்கைகள் மிகவும் குறைவாக உள்ளதால், தண்டனையின்றி விடுபடும் நிலைமை நாட்டில் இன்னும் கடுமையான பிரச்சினையாக உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
