அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு மாணவர்கள், கலாசாரப் பரிமாற்ற
பார்வையாளர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கான விசா கால வரம்பைக் குறைத்து
விதிமுறைகளைக் கடுமையாக்க டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய இறுதி விதியை
அறிவித்துள்ளது.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள இந்த உத்தரவின்படி,
வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் கலாசாரப் பரிமாற்ற திட்டங்களில் வருபவர்களின்
விசா காலம் இனி அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் என வரம்பிடப்படும்.
விசா விதிமுறைகள்
அதேபோன்று, ஊடகவியலாளர்களுக்கான விசா காலம் வெறும் 240 நாட்களாகக்
குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சீனாவைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கு இந்த விசா கால வரம்பு
90 நாட்களாக மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பின்னர் அமெரிக்காவை விட்டு
வெளியேறுவதற்கான கால அவகாசம் 60 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் பாதியாகக்
குறைக்கப்பட்டுள்ளது.
கல்வி பயிலும் போது மாணவர்கள் தங்களது நோக்கங்களை மாற்றுவதற்கோ அல்லது உரிய
அனுமதியின்றி வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறுவதற்கோ புதிய கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர்களின் வருகை 11 சதவீதம் அதிகரித்ததால்,
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வெளிநாட்டினரைக் கண்காணிப்பது தங்களுக்குப்
பெரும் சவாலாக இருப்பதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த புதிய விசா கொள்கை முற்றிலும் “பாரபட்சமானது” என சீன
வெளியுறவு அமைச்சு கடுமையாகச் சாடியுள்ளதுடன், அமெரிக்கா இதனை உடனடியாகத்
திரும்பப் பெறாவிட்டால் தகுந்த பதிலடி நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்றும்
எச்சரித்துள்ளது.
Source: https://tamilwin.com/article/us-tightens-visa-rules-foreign-students-journalist-1784352080
