Home இலங்கை அரசியல் இலங்கை தொடர்பான கோரிக்கையை மறுத்துள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள்

இலங்கை தொடர்பான கோரிக்கையை மறுத்துள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள்

0

இலங்கை அரசிடம் போதிய நிதி இல்லாததன் விளைவாக ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டி, நிதி உதவிகளை வழங்குமாறு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை மறுத்திருக்கும் அமெரிக்காவின் உயர்மட்டப் பிரதிநிதிகள், அதற்கான சாத்தியப்பாடுகள் பெருமளவுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, புதிய அரசு பேணிவரும் சமநிலையான வெளியுறவுக் கொள்கை தொடர்பில்
திருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் அப் பிரதிநிதிகள், பயங்கரவாதத் தடைச்
சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பன தொடர்பில் அரசால் வழங்கப்பட்ட
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்குரிய அழுத்தங்களைச் சிவில் சமூகப்
பிரதிநிதிகள் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்திருக்கும் தெற்கு
மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்
செயலர் டொனால்ட் லூ தலைமையிலான அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும், மனித
உரிமைகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு
கொழும்பில் நடைபெற்றது.

பொருளாதார நிலவரம்

இந்தச் சந்திப்பின்போது நாட்டின் சமகால மனித உரிமைகள் மற்றும் பொருளாதார
நிலவரம் குறித்தும், புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் தேசிய மக்கள்
சக்தி அரசின் நகர்வுகள் குறித்தும் பரந்துபட்ட அடிப்படையில்
கலந்துரையாடப்பட்டது.

அதன்படி தற்போது தொடர்ந்து நடைமுறையில் இருந்துவரும் பயங்கரவாதத் தடைச் சட்டம்
மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்தும், அரச சார்பற்ற அமைப்புக்கள்
தொடர்பான உத்தேச சட்டமூலம் குறித்தும் அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகளிடம் தமது
தீவிர கரிசனையை வெளிப்படுத்திய சிவில் சமூக பிரதிநிதிகள், அவற்றின் தாக்கங்கள்
தொடர்பிலும் விரிவாக விளக்கமளித்தனர்.

அதனைச் செவிமடுத்த அமெரிக்கப் பிரதிநிதிகள், இச்சட்டங்களை முற்றாக நீக்குவது
குறித்து அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் உரியவாறு
நடைமுறைப்படுத்துவதற்குரிய அழுத்தங்களை சிவில் சமூக பிரதிநிதிகள் தொடர்ந்து
வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஜனநாயக ஆட்சி 

அதுமாத்திரமன்றி ஜனநாயக ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், மனித
உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இவ்விடயங்கள் தொடர்பில் சகலரையும் உள்ளடக்கிய
பரந்துபட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும்
அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை புதிய அரசின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் சிவில் சமூகப்
பிரதிநிதிகளிடம் திருப்திகரமான சமிக்ஞையை வெளிப்படுத்திய அமெரிக்கப்
பிரதிநிதிகள், அரசு ஏனைய நாடுகளுடன் சமநிலைத்தன்மை வாய்ந்த வெளிவிவகாரக்
கொள்கையைப் பேணி வருவதாகத் தெரிவித்தனர்.

அதேபோன்று பொருளாதாரக் கொள்கை என்று வருமிடத்து, சர்வதேச நாணய நிதியத்துடனான
விரிவாக்கப்பட்ட நிதி வசதி செயற்றிட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட
நிபந்தனைகளுக்கு அமைவாக அரசு செயலாற்றி வருவது குறித்து வரவேற்பு வெளியிட்ட
அமெரிக்கப் பிரதிநிதிகள், சமகால பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள்
பற்றியும் கலந்துரையாடினர்.

அமெரிக்க உயர்மட்டக் குழுவினர்

இதன்போது இலங்கை அரசிடம் போதுமான நிதி இல்லை எனவும், அது மிக முக்கிய
பிரச்சினையாக இருப்பதாகவும் அமெரிக்க உயர்மட்டக் குழுவினரிடம் சுட்டிக்காட்டிய
சிவில் சமூக பிரதிநிதிகள், எனவே, இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கமுடியாதா? எனக்
கேள்வி எழுப்பினர்.

இருப்பினும் அதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என அவர்கள் பதிலளித்தனர்.
அதனையடுத்து எம்.சி.சி. ஒப்பந்தத்தில் இலங்கையை உள்வாங்குவதற்கான வாய்ப்பு
உண்டா? எனச் சிவில் சமூகப் பிரதிநிதிகளால் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த
ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டமையினால் அதுவும் சாத்தியமில்லை என அமெரிக்கப்
பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

இருப்பினும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டு அரசால்
முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு அவசியமான தொழில்நுட்ப உதவிகளை
வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், மக்களின் குரலைப்
பிரதிபலிக்கக்கூடியவாறு சகலரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகத்தைக்
கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவோம் எனவும் அவர்கள்
சிவில் சமூக பிரதிநிதிகளிடம் உறுதியளித்தனர்.

NO COMMENTS

Exit mobile version