வலி. வடக்கு பிரதேசத்தில் 2400 ஏக்கருக்கு மேற்பட்ட பிரதேசத்தில் மக்கள்
குடியேற்றப்பட வேண்டியுள்ளது என வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார்.
வலி. வடக்கு பிரதேசசபையில் நேற்று(27.06.2025) இடம்பெற்ற முதலாவது அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த ஏப்ரல் மாதம் மீள்குடியேற்ற அமைச்சினால் 182 மில்லியனுக்கு மேற்பட்ட
தொகை ஒதுக்கப்பட்டிருந்தது. அது சபையினால் மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்படாமை
போன்ற தவறினால் உபயோகப்படுத்தப்படாமலுள்ளது.
வரவுசெலவுத்திட்ட நிதி
தற்போது சபையை
பொறுப்பெடுத்துள்ளதால் அதனை விரைவுபடுத்தப்படவேண்டிய தேவைப்பாடுள்ளது.
இவற்றுடன் மாகாண விசேட அபிவிருத்தி நிதியத்தினூடாகவும் சபையினுடைய
வரவுசெலவுத்திட்ட நிதியூடாகவும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள்
பல உள்ளன.
இவற்றுடன் உடனடியாக காங்கேசன்துறையில் நூலகத்தையும் பிரதேச சபைக்குரிய தலைமை
அலுவலகத்தையும் அமைக்க வேண்டிய தேவையுள்ளது.
2024ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி விடுவிக்கப்பட்ட காணிகளிலிருந்து இதுவரை
வேலி அகற்றப்படவில்லை.
ஆளுநரின் கோரிக்கை
மீள் குடியேற்றத்திற்காக நிதிகள் ஒதுக்கப்பட்டாலும்
குறித்த பிரதேசத்தினுள் மக்கள் செல்ல முடியாத நிலை தொடர்வதால் அபிவிருத்திகளை
மேற்கொள்ள முடியாதுள்ளதுடன் மக்களுக்கான மின் இணைப்பை பெறுவதற்கும் கூட இராணுவ
பாதுகாப்பு வேலிகள் அகற்றப்பட வேண்டிய தேவையுள்ளது.
இதனை அகற்றுமாறு புதிய
இராணுவத் தளபதியிடம் வடக்கு மாகாண ஆளுநரும் கோரிக்கையை முன்வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக மயிலிட்டியிலும் காணி விடுவிப்புக்கான போராட்டம்
நடைபெற்றது.
அது போல காணிகளை மீட்க சாதகமான விடயங்களை மேற்கொண்டு இராணுவக்
கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகள், வருமானம் ஈட்டும் மூலங்கள் மற்றும்
ஆலயங்கள் என்பவற்றை மீட்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
