யாழ்ப்பாணம் – வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.
வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் நேற்று (17) மாலை வடமராட்சி, பருத்தித்துறை – கற்கோவளம் கடற்பரப்பில் நடைபெற்றது.
சமுத்திர தீர்த்தத் திருவிழாவின் போதே குறித்த துயர சம்பவங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீர்த்தத் திருவிழா
இந்த அனர்த்தங்களில், வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையைச் சேர்ந்த 54 வயதுடைய கந்தசாமி வினோகரன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மேலும் சாவகச்சேரி – நுணாவிலைச் சேர்ந்த 30 வயதுடைய தயாரூபன் வைஷ்ணவன் என்ற இளைஞர் காணாமல் போயுள்ளார். இவர் வேம்படி மகளிர் கல்லூரியின் ஆசிரியராக பணியாற்றுகின்றார்.
நேற்று மாலை இடம்பெற்ற சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவைக் காண பல பாகங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.
வழமை போன்று வல்லிபுர ஆழ்வார் தீர்த்தமாடிய பின்னர், பக்தர்கள் கடலில் இறங்கி நீராடினர். இதன்போது, உயிரிழந்த குறித்த நபர் நீரில் மூழ்கியுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இந்த நிலையில் அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு கடற்கரையை அண்டிய பரப்பு மணல் நிறைந்தது என்பதால் சுமார் 1.5 கிலோமீற்றர் தூரம் அவரை டிரக்டர் வாகனத்தில் கொண்டு சென்று, பின்னர் நோயாளர் காவு வண்டி மூலமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.
ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், சுமார் இரவு 8.30 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரைக் காணவில்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து நேற்று இரவு கடற்படையினர் மற்றும் அந்தப் பகுதி கடற்றொழிலாளர்களின் உதவியுடன் அவரைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது. எனினும் நீண்ட நேரத் தேடுதலில் அவர் மீட்கப்படவில்லை.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.