வவுனியா மாநகரசபைக்கு சொந்தமான விலங்கறுமனை (கொல்களம்) சுகாதார சீர்கேட்டுடன்
இயங்குவதாக மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் சென்று பரிசோதனை மேற்கொண்டு
தெரிவித்திருந்த நிலையில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை குறித்த கட்டடத்திற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக ஒப்பந்தகாரர்கள் குறித்த இடத்தினை மாநகரசபை சீர்செய்து
தரும்வரையில் விலங்குகளை அறுக்கமுடியாது என தெரிவித்து விலங்குகளை
இறைச்சிக்காக அறுக்காறு நிறுத்தியதுடன் வவுனியாவில் உள்ள இறைச்சிக்கடைகளும்
மூடப்பட்டிருந்தன.
சுகாதார பிரச்சனை
இதனால் மாநகரசபையின் வருடாந்த வருமான இழப்பிற்கும் இது காரணமாக அமைந்திருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வவுனியா மாநகரசபை செயலாளர்
உள்ளிட்ட குழு விலங்கறுமனயை பார்வையிட்டதன் பின் ஒப்பந்தகாரர்களுடன்
கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது ஒப்பந்தகாரர்களால் விலங்கறுமனைகளை செயற்படுத்துவதாக இருந்தால்
மாநகரசபைக்கு சொந்தமான குறித்த கட்டிடத்திதை பார்வையிட்ட மாநகரசபை
உறுப்பினர்கள் அடங்கிய குழு கூறிய சுகாதார பிரச்சனைகளை சீர்செய்து தரவேண்டும்
என கோரிக்கையினை விடுத்திருந்தனர்.
இதன் பிரகாரம் 29.07.2025 திகதியிடப்பட்டு வழங்கப்பட்ட கடிதத்தில்,
குறித்த விலங்கறுமனை மின்சார விநியோகம் முன்னறிவித்தல் இன்றி
துண்டிக்கப்பட்டமை தொடர்பில் மின்சார சபையிடம் பதிலை சபை எதிர்பார்த்துள்ள
அதேநேரம் 23.07. 2025 அன்று மின் இணைப்பு மீள வழங்கப்பட்டுள்ளது.
புனரமைப்பு பணி
சபையின் விலங்கறுமனையினை சென்று பார்வையிட்ட குழுவினர் அங்கே சில புனரமைப்பு
பணிகள் செய்ய வேண்டியுள்ளதை குறிப்பெடுத்துக் கொண்ட போதிலும் அவை அம்மனையின்
தொடர் செயற்பாடுகளை பாதிப்பதாக கருதவில்லை என கூறப்படுகிறது.
தங்களுடைய செயற்பாடுகளை இடைநிறுத்தும்படி சபை எழுத்துமூலமான கட்டளைகள்
எதனையும் வழங்கவில்லை என குறிப்பிடுவதுடன் தங்களது செயற்பாடுகளை தொடர்ந்து
மேற்கொள்ளுவதில் தடை ஏதும் இல்லை என்பதையும் அறியத்தருகிறேன்.
குறித்த விலங்கறுமனையின் சுகாதாரம் தொடர்பில் சபை தொடர்ந்தும் கரிசனையுடன்
சேவைகளை வழங்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கடிதம் மூலம்
தெரிவித்ததை தொடர்ந்து இன்று முதல் விலங்கறுமனை திறக்கப்பட்டதுடன்
இறைச்சிக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.
இனிய மாநகர சபை செயலாளர் பாலகிருபனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தானும் பொது
சுகாதார பரிசோதகரும் விலங்கறுமனைக்கு நேரடியாக சென்று பார்வையற்றதாகவும்
ஆணையாளரும் குறித்த இடத்தினை நிகழ்நிலை மூலமாக பார்வையிட்டதன் அடிப்படையில்
குறித்த இடத்தில் சுகாதார சீர்கேடுகள் எதுவும் இல்லை எனவும் சில திருத்த
பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதோடு அப்பணிகள் குறித்த இடத்தில் செயற்பாடுகளை
மேற்கொள்வதற்கு தடையாக இல்லை எனவும் கண்டறிந்ததன் அடிப்படையில் மீளவும்
செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு ஒப்பந்ததாரர்களுடன் கலந்துரையாடி குறித்த கடிதத்தை
வழங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
செய்தி – திலீபன்
