வவுனியா (Vavuniya) வடக்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள், தவிசாளரின் செயற்பாடுகளால் அலுவலகத்தில் இருந்து வெளியேற முற்பட்டுள்ளனர்.
இதையடுத்து, உப தவிசாளரின்
கோரிக்கைக்கு இணங்க அச்செயற்பாட்டை உத்தியோகத்தர்கள் கைவிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
உத்தியோகத்தர்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர், தொடர்ச்சியாக நிர்வாக செயற்பாட்டில்
குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக செயலாளர் உட்பட்ட உத்தியோகத்தர்கள்
கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதுடன் நேற்று (01) அலுவலகத்தில் இருந்து
வெளியேறுவதற்கும் தீர்மானித்துள்ளனர்.
முறையிட நடவடிக்கை
உத்தியோகத்தர்களுடன் கடும் தொனியில் செயற்பட்டு வருவதாகவும் ஆண்
உத்தியோகத்தர்கள் முகச்சவரம் செய்ய வேண்டும் மற்றும் சப்பாத்து அணிய வேண்டும் போன்ற
கட்டுப்பாடுகளை விதிப்பதோடு களஞ்சிய காப்பாளர் களஞ்சியசாலைக்குள்ளேயே இருக்க
வேண்டும் போன்ற உத்தரவுகளை பிறப்பித்ததோடு செயலாளருடனும் முரண்படுவதனாலுமே
இந்தநிலை தோன்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சிலர்
அலுவலகத்தில் இருந்து வெளியேறி பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவிருந்ததுடன் உயர்
அதிகாரிகளிடம் முறையிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருப்பினும், உப தவிசாளர் சஞ்சுதன் மற்றும்
இரு ஆளும் கட்சி உறுப்பினர்கள் செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களிடம் வினயமாக
ஐந்து நாள் அவகாசம் கேட்டதுடன் தாம் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி
தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து
உத்தியோகத்தர்கள் தமது செயற்பாட்டை கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
