இலங்கை கட்டளைகள் நிறுவனத்துடனான கூட்டிணைவு, வவுனியா பல்கலைக்கழகத்தை ஒரு பிராந்தியத் தர மையமாக மாற்றும் என வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வவுனியா பல்கலைக்கழகம் இப்பிராந்தியத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயந்திரமாகத் திகழ்வதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
வவுனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வடக்கிலேயே பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கை கட்டளைகள் நிறுவனம் தரச் சான்றிதழ்களை வழங்குவது தொடர்பாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கான மாகாண நிர்வாகத்தின் தேவைகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
தர இடைவெளி
மேலும் குறித்த கலந்துரையாடலில், “ தேசிய தர நிர்ணய அமைப்பான இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் முதன்மைப் பணியானது, வடக்கின் பிராந்திய உற்பத்திக்கும் சர்வதேச சந்தைத் தேவைகளுக்கும் இடையிலான ‘தர இடைவெளியை’ நிரப்புவதாகும்.
வடக்கில் உணவு பதப்படுத்துதல், கைவினைப்பொருட்கள் மற்றும் இரசாயன உற்பத்திகளில் ஈடுபடும் பல சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள், முறையான தரச்சான்றிதழ் இன்மையால் கொழும்பு அல்லது ஏற்றுமதி சந்தைகளுக்குள் நுழைய முடியாது சிரமப்படுகின்றனர்.
இவர்களுக்குத் தேவையான சிறந்த உற்பத்தி நடைமுறை மற்றும் எஸ்.எல்.எஸ். தரச்சான்றுகளை வழங்குவதன் மூலம், அப்பொருட்கள் சர்வதேச சந்தைக்குள் நுழைவதற்கான ஒரு கடவுச்சீட்டை வழங்க முடியும்”எனத் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கின் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதித் தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) இணைந்து முன்னெடுத்துள்ள தரச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைக்கு வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
