நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நுவரெலியாவில் மரக்கறிகளின் விலை மீண்டும்
அதிகரித்துள்ளது.
தொடர்ச்சியாக மழையுடன் கூடிய வானிலை காரணமாக மரக்கறி
பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
மரக்கறிகளின் விலை
கனமழையால் காய்கறிகளை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வரமுடியாமல் மழையால்
பயிர்கள் சேதமடைவதால் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நுவரெலியா மத்திய சந்தையில் ஒரு
கிலோகிராம் நிறையுடைய கறிமிளகாய் – 750 ரூபா , கோவா- 350 ரூபா, கரட் – 400
ரூபா, லீக்ஸ் – 420 ரூபா, ராபு – 160 ரூபா, இலையுடன் பீட்ரூட் 400 ரூபா,
இலையில்லா பீட்ரூட் 480 ரூபா, உருளைக் கிழங்கு – 460 ரூபா கத்தரிக்காய் – 360
ரூபா என விலைகள் அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, உயர் தர சமையலுக்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலை ஒரு
கிலோகிராம் நிறை ஒன்றின் விலை – 450 ரூபா, ப்ரக்கோலி – 3900 ரூபா, கோலிப்ளவர்
– 1600 ரூபா என்றவாறு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மழையால் பயிர்கள் அழிந்து வருவதே இந்த விலை உயர்விற்கு காரணம் என
விவசாயிகள் குறிப்பிட்டதுடன் குறைந்த விலையில் காய்கறிகள் கொண்டு வந்தாலும்,
பொருளாதார மையங்களில் உரிய விலை கிடைப்பதில்லை எனவும் குற்றம் சுமத்துகின்றனர்.
அத்துடன், நுவரெலியாவில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை
நடத்துபவர்கள் உரம், கிருமிநாசினி என்பவற்றை அதிக
விலைக்கு கொள்வனவு செய்து விவசாயத்தைக் கை விடாமல் பாதுகாத்து வரும் நிலையில்
சீரற்ற வானிலையால் அழிவடைந்து வருவது தொடர் கதையாக உள்ளமையால் ஒரு சிலர்
விவசாயத்தினை கைவிடும் நிலை அதிகரித்துள்ளது.