தற்போதைய சூழ்நிலையில் புதிய வாகனங்களை கொள்வனவு செய்வது பொருத்தமானதாக இருக்காது என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர்,” முன்னதாக வாகன இறக்குமதி நிறுத்தப்பட்ட பின்னர் இலங்கையில் இருக்கின்ற வாகனங்களின் விலை பலமடங்கு அதிகரித்தன.
வாகன இறக்குமதி
இந்நிலையில், வாகனங்களை வைத்து கொள்ள முடியாது பலர் விற்பனை செய்த நிலையில் அதனை கொள்வனவு செய்தவர்கள் அவற்றை விற்பனை செய்ய முடியாது சிரமத்தில் உள்ளனர்.
ஏற்கனவே, அரச துறையில் இருக்கின்ற, அனுமதி பத்திரங்களை வைத்து கொண்டிருப்பவர்கள், மிக பெரிய எண்ணிக்கையில் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான நிலையில், எந்த கட்டுபாடும் இல்லாமல், வாகன இறக்குமதியை அனுமதிக்குமாக இருந்தால் டொலரின் வெளிப்பாய்ச்சல் மிகப்பெரிய அளவில் இடம்பெற வாய்ப்புள்ளது.
டொலர் கையிருப்புக்கள்
இதன் காரணமாக இலங்கையில் தற்போதுள்ள டொலர் கையிருப்புக்கள் கரைந்து விடும். எனவே அரசாங்கம் டொலர் கையிருப்பை கரைத்து விடாமல் வாகன இறக்குமதியையும் அதேநேரத்தில் அனுமதிக்க வேண்டிய ஒரு சூழல் இருக்கின்றது.
இந்நிலையில், வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டால், பழைய வாகனங்களின் விலை குறைவடையும் என்னும் மக்களின் கருத்து சாத்தியப்பட வாய்ப்பில்லை.
விலைக்குறைப்பு ஒரு சிறிய மாற்றத்தில் ஏற்படலாமே தவிர பழைய நிலைமையில் வாகனங்களின் விலைகள் இருக்காது. எனவே, இப்போதைய சூழ்நிலையில் வாகனங்களை வாங்காமல் இருப்பது தான் பொருத்தமானதாக இருக்கும்.
ஏனென்றால், புதிய வாகனங்கள் அனுமதிக்கப்படும் போது, பழைய வாகனங்களின் சந்தை ஒரு குறிப்பிட்ட அளவில் நிலை கொள்ளும்.
ஒரு குறிப்பிட்ட விலைமட்டத்திற் அது சமநிலை அடைய வாய்ப்பு இருக்கின்றது. அது தான் மிக பொருத்தமான தருணமாக இருக்கும்” என வலியுறுத்தியுள்ளார்.