இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் வேகமாகக் குறையும் என ஜப்பான், இலங்கை வர்த்தக சங்கம் (Sri Lanka Japan Business Council) தெரிவித்துள்ளது.
அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில் வாகனங்களின் விலை குறையவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க (Jagath Ramanayake),“குறைந்த இயந்திர திறன் கொண்ட வாகனங்களே நாட்டுக்கு மிகவும் பொருத்தமானது.
வாகன இறக்குமதிக்கு தடை
கொரோனா தொற்று நோயுடன், 2021 முதல் நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி, அடுத்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்த நிலைமையுடன் நாட்டில் வாகனங்களின் விலைகள் வேகமாகக் குறையும்“ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ள நிலையில் வாகன இறக்குமதி தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.