எனது தாய் கட்சி, அரசியல் பாசறை மற்றும் எனது பெயரை சமூகத்திற்கு
விளங்கச் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விட்டு ஒருபோதும் விலகிச் செல்ல
மாட்டேன் என நுவரெலியா பிரதேச சபையின் முன்னால் தலைவர் வேலு யோகராஜ்
தெரிவித்துள்ளார்.
நுவரெலியா
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட காரியாலயத்தில் இன்று (20.08.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க இ.தொ.கா
தீர்மானம் எடுத்துள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய
பொறுப்புக்கள் காங்கிரஸ் உயர் பீடத்தால் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிழையான கருத்து
இந்தநிலையில், நான் காங்கிரஸை விட்டு விலகிவிட்டேன் எனவும், ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க போவதாகவும், அவர்களின்
கட்சியில் இணைந்து விட்டதாகவும் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு எனது
பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறாக சமூக வலைத்தளங்களில் உள்ள சில இணையத்தள, ஊடகங்களில் என் மீது பிழையான
கருத்தை தெரிவித்து செய்திகள் பரப்பப்படுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கின்றேன்.
அதேநேரத்தில் கடந்த காலத்தில் நாடு எதிர்நோக்கிய பொருளாதார சிக்கலில் இருந்து
நாட்டில் அனைத்து மக்களையும் காப்பாற்ற முன்வந்த ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவிற்கு நுவரெலியா மாவட்ட மக்கள் முன்வந்து வாக்களித்து
வெற்றிப்பெற செய்ய வேண்டும்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு எவருக்கும் ஆதரவு வழங்கையும்
மாட்டேன். இ.தொ.காவை தவிர வேறு எந்த கட்சியுடனும் இணையவும் மாட்டேன்” என சுட்டிக்காட்டியுள்ளார்.