Home அமெரிக்கா ட்ரம்பின் உத்தியோகபூர்வ வலைதளத்தில் ஒளிபரப்பான காணொளியால் பரபரப்பு

ட்ரம்பின் உத்தியோகபூர்வ வலைதளத்தில் ஒளிபரப்பான காணொளியால் பரபரப்பு

0

அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இணையதளமான whitehouse.gov/live பக்கத்தில், ஜனாதிபதியின் நேரலை உரைகளுக்குப் பதிலாக, யூடியூபர் ஒருவரின், நேரலை காணொளி ஒளிபரப்பானமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் போது, RealMattMoney என்ற
யூடியூப் பக்கத்தில் நிதி முகாமை குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்துக்
கொண்டிருந்த காணொளி, ஜனாதிபதி உரையாற்றும் அதே தளத்தில் நேரடியாகத் தோன்றியது.

இந்தச் சம்பவம் இணையதள ஊடுருவல் (Hacking) காரணமாக நடந்ததா அல்லது வெள்ளை
மாளிகை ஊழியர் யாராவது தவறுதலாக அந்த காணொளி இணைப்பைச் சேர்த்துவிட்டார்களா
என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிஜிட்டல் பாதுகாப்பு 

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த விவகாரத்தைத்
தாங்கள் கவனித்து வருவதாகவும், என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து
வருவதாகவும்” தெரிவித்துள்ளது.

தனது காணொளி உலகின் மிக முக்கியமான இணையதளத்தில் ஒளிபரப்பானமை குறித்து
வியப்படைந்த மேட் ஃபார்லி, இவ்வளவு பெரிய தளத்தில் தனது காணொளி வெளியாகும்
என்று தெரிந்திருந்தால், இன்னும் முறையான ஆடையணிந்து, முக்கியமான தலைப்புகளில்
பேசியிருப்பேன் என்று நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் மற்றும் அவரது தேர்தல் பிரசாரக்
குழு கடந்த ஓராண்டில் பல டிஜிட்டல் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சந்தித்து
வந்துள்ளது.

ஏற்கனவே ஈரானிய ஹேக்கர்களால் ரகசிய ஆவணங்கள் திருடப்பட்டமை மற்றும் உயர்
அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டமை போன்ற
சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், தற்போது அரசின் நேரலை இணையதளம்
பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காவின் டிஜிட்டல் பாதுகாப்புத் திறனை மீண்டும்
கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version