நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமராக தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவே தொடர்ந்து பதிவி வகிப்பார் என அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
கொழும்பில்(Colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“எதிர்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்படப் போகின்றன.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 25 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்படும்.
அத்துடன், அடுத்த ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டம் டிசம்பரில் தாக்கல் செய்யப்படும்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் அவசியமா என்பதை கண்டறிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கருதி வழங்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் தற்போது அவர்களின் வீடுகளில் பணிபுரியும் குழுவாக மாறியுள்ளமை காவல்துறையை அவமதிக்கும் செயலாகும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு தேவையான உத்தியோகத்தர்கள் மாத்திரம் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.