விமான நிலையத்தில் வீசா கவுண்டர்கள் 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
வீசா பிரச்சினை
வீசா பிரச்சினைக்கு நீதிமன்ற தீர்வு கிடைக்கும் வரை, வருகை வீசா (on arrival visa) வழங்கும் முறை நடைமுறைபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஒரே நேரத்தில் பல விமானங்கள் வரும்போது, வீசா வழங்கப்படும் கவுண்டர்களில் வரிசைகள் இருப்பதாகவும், இந்த நிலையை குறைக்க, தற்போதுள்ள கவுண்டர்களுக்கு மேலதிகமாக 12 கவுண்டர்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக ஒன்லைன் வீசா வழங்கும் வகையில் விமான நிலையத்தில் உருவாக்கப்பட உள்ள புதிய முறையினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு,உச்ச நீதிமன்றில் அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
மனு தாக்கல்
இந்த வீசா முறைமையினால் நாட்டின் முக்கிய தகவல்கள் கசியும் அபாயம் காணப்படுவதாகவும் இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட ரீதியில் இந்த மனுக்களை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்யபட்டது.
மேலும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், சுற்றுலாத்துறை அமைச்சர், சட்ட மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலே வீசா பிரச்சினைக்கு நீதிமன்ற தீர்வு கிடைக்கும் வரை, வருகை வீசா (on arrival visa) வழங்கும் முறை நடைமுறைபடுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.