சீரற்ற காலநிலை தொடர்பில் முன்கூட்டி அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நீர் நிலைகளின் நீரை முறையாக முகாமைத்துவம் செய்திருந்தால் ஏற்பட்ட அனர்த்தத்தின் பாதிப்பை குறைத்துக்கொள்ள முடியுமாகி இருந்திருக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மனித உயிர்களையும் முடியுமானவு பாதுகாத்துக்கொள்ள முடிந்திருக்கும். அதனை செய்ய அரசாங்கம் தவறி இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
சர்வதேச ஊடகங்களின் காலநிலை
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
“நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் சர்வதேச ஊடகங்களின் காலநிலை அறிக்கைகளில் அனர்த்தம் இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே அதுதொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதிக மழைவீழ்ச்சி ஏற்படும் எனவும் எதிர்வு கூறியிருந்தன. அந்த சந்தர்ப்பத்திலே எமது நாட்டில் இருக்கும் நீர் தேக்கங்களின் நீரை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
நீர் முகாமைத்துவம் என்பது உலகில் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. இலங்கையிலும் இருக்கிறது.நீர் முகாமைத்துவ பிரிவுகள் பல்வேறு மட்டத்தில் இருக்கின்றன. மகாவலியில் நீர் முகாமைத்துவ பிரிவொன்று இருக்கிறது.
நீர்ப்பாசனத்தில் பிரிவொன்று இருக்கிறது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்திலும் இருக்கிறது. என்றாலும் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவு எமது நாட்டுக்கு 500 மில்லி மீட்டர் வரை மழை பெய்திருக்கிறது.
அதனால் பாரியளவில் எமது நீர் நிலைகளுக்கு நீர் கிடைத்தது. என்றாலும் இதனை மகாவலி நீர் தேக்கத்தினால் தனியாக கட்டுப்படுத்த முடியாது. அதேபோன்று நீர்ப்பாசன அதிகாரிகளாலும் தனியாக மேற்கொள்ள முடியாது. அப்படியானால் அதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட வழிநடத்தல் ஒன்று அவசியமாகும்” என கூறியுள்ளார்.
