Home இலங்கை சமூகம் கிழக்கில் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சி.. திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு

கிழக்கில் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சி.. திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு

0

இன்றிலிருந்து நாட்டில் மழை ஓரளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, இந்த வானிலை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

மத்திய மலைப் பிரதேசத்தின் கிழக்குச் சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் இடைக்கிடையே பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் அவதானம் 

மேலும், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, தொலுவ, மெததும்பர, கங்கா இஹல கோரள மற்றும் மினிப்பே பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பதுளை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கும் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் குறித்த இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version