Home இலங்கை அரசியல் ராஜபக்சக்களின் வெளிநாட்டு சொத்துக்களை கொண்டு வரும் வரையில் போராடுவோம் – நாமல்

ராஜபக்சக்களின் வெளிநாட்டு சொத்துக்களை கொண்டு வரும் வரையில் போராடுவோம் – நாமல்

0

ராஜபக்சக்களின் வெளிநாட்டு சொத்துக்களை நாட்டுக்கு கொண்டு வரும் வரையில் நாம் அரசாங்கத்துடன் போராடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்களினால் உகண்டாவில் மறைத்து வைக்கப்பட்ட பணம் உள்ளிட்ட வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணம் மற்றும் ராஜபக்சக்களுக்கு சொந்தமான வெளிநாட்டு சொத்துக்களை விற்று பணம் கொண்டு வர வேண்டுமென அரசாங்கத்துடன் போராடுவதாகத் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்படும்

ராஜபக்சகளுக்கு டுபாயில் ஹோட்டல் உண்டு, 18 லம்போகினி கார்கள் இறக்குமதி செய்யப்பட்டன, அமெரிக்காவில் மாளிகையொன்று உள்ளது, உகண்டாவிற்கு விமானத்தில் பணம் எடுத்துச் செல்லப்பட்டது என ஆளும் கட்சியினர் குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த செல்வத்தை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

   

குறித்த சொத்துக்களை கொண்டு வரத் தவறினால் தேர்தல் மேடைகளில் கூறியது பொய் என மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமையில்லை எனவும், அரசாங்கம் ஆட்சிக் காலம் முழுவதிலும் பொய்யுரைத்துக் கொண்டிருக்க இடமளியோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் வரையில் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version