தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி சின்னத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் ஆசிரியர்கள், மருத்துவர்கள் தங்களது தொழில்களை பார்த்துக் கொள்ளுமாறும், அரசியலை நாங்கள் பார்த்துகொள்கின்றோம் எனவும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு பொருத்தமுடையவர்கள் அல்ல
ஹட்டனில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களில் மருத்துவர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட தொழில்வாண்மையாளர்கள் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு அரசியல் பொருத்தமற்றது எனவும் அவர்கள் தங்களது தொழில்களை முன்னெடுத்துச்செல்லவே பொருத்தமானவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலில் அனுபவம்
தமிழ் முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் தாம் உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு அரசியலில் நல்ல அனுபவம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்பற்றி தெரியாத தொழில் நிபுணர்கள் அரசியலுக்கு பொருத்தமுடையவர்கள் அல்ல எனவும் இம்முறை பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பதிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களினால் மட்டுமே எம்மை அரசியலில் இருந்து விலக்கிக்கொள்ள முடியும் எனவும் வேறு எவரும் தம்மை அரசியலிலிருந்து விலக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.