Home முக்கியச் செய்திகள் சுட்டுக்கொல்லப்பட்ட லசந்த விக்ரமசேகரவின் பாதுகாப்பு கோரிய கடிதம் : காவல்துறையின் அறிக்கை

சுட்டுக்கொல்லப்பட்ட லசந்த விக்ரமசேகரவின் பாதுகாப்பு கோரிய கடிதம் : காவல்துறையின் அறிக்கை

0

வெலிகம பிரதேச சபைத் தலைவர் பாதுகாப்பு கோரியதாக ஊடகங்களில் பரவி வரும் கடிதம் தொடர்பாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ”வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, கடந்த 22ஆம் திகதி பிரதேச சபையின் உத்தியோகபூர்வ அறையில் அடையாளந்தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உயிரிழந்தவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கக் கோரி, காவல்துறைமா அதிபருக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம், அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகக் கூறி, தற்போது முக்கிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

காவல்துறைமா அதிபருக்கு கடிதம்

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, பாதுகாப்பு வழங்குமாறு கோரி கடந்த செப்டம்பர் 6ஆம் திகதியன்று காவல்துறைமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் அந்தக் கடிதம் தொடர்பில், நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைமா அதிபர் தென் மாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபருக்கு கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, தென் மாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர், மேற்படி கடிதத்தை மாத்தறை – ஹம்பாந்தோட்டை மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு அனுப்பி, மேலதிக நடவடிக்கை எடுக்குமாறும், தலைமையக காவல்துறை பரிசோதகர் வெலிகம மற்றும் காவல் நிலைய பொறுப்பதிகாரி மிதிகம ஆகியோருக்கு அறிவித்துள்ளார்” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version