Home முக்கியச் செய்திகள் அரசுக்கு சுமந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை

அரசுக்கு சுமந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை

0

காணி அபகரிப்பு குறித்து அரசு வெளியிட்ட வர்த்தமானியை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெகுவிரைவில் வெளியிடப்படாவிடின், சட்ட மறுப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் தனது உத்தியோகபூர்வ சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவிலே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில், “27.05.2025 அன்று காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரித்த வர்த்தமானியை மீள்கை வாங்குவதாக அரசு அறிவித்தது.

வெளியிடப்பட்ட பதிவு

நாம் விதித்த காலக்கெடுவுக்கு முதல் நாள் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. ஒரு வாரமாகியும் இன்று வரை அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை. உடனடியாக இது செய்யப்படாவிட்டால், சட்ட மறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர வேறு தெரிவு எமக்கு இருக்க மாட்டாது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத்துக்குள் எவரும் உரிமை கோராது விடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என ஆளும் தரப்பினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் மார்ச் 28ஆம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டது.

வர்த்தமானி அறிவித்தல்

இந்த நிலையில் குறித்த அறிவித்தலை ஆளும்தரப்பும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ் அரசியல் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு உருவானது.

வர்த்தமானியைத் திரும்பப் பெறாவிட்டால் வடக்கில் அரச செயற்பாட்டு முடக்கப் போராட்டம், சட்டமறுப்புப் போராட்டம் என்பன இடம்பெறும், ஜனாதிபதி அநுரகுமார வடக்குக்கு வர முடியாத வகையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழரசுக் கட்சி அறிவித்திருந்தது.

அதுமட்டுமன்றி, இந்த வர்த்தமானி அறிவித்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச சட்ட உதவியை வழங்கவும் சட்டத்தரணிகள் குழு முன்வந்திருந்தது. இந்தநிலையில், அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், அரசு வெளியிட்ட வர்த்தமானியை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெகுவிரைவில் வெளியிடப்படாவிடின், சட்ட மறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர வேறு தெரிவு எமக்கு இருக்க மாட்டாது என சுமந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You may like this

https://www.youtube.com/embed/lw2ojVFiqzk

NO COMMENTS

Exit mobile version