Home இலங்கை குற்றம் அடைக்கலம் கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிலேயே நகையை திருடிய பெண் கைது

அடைக்கலம் கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிலேயே நகையை திருடிய பெண் கைது

0

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் தனக்கு அடைக்கலம் கொடுத்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின்
வீட்டில் இருந்த 9 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஆரையம்பதியைச் சேர்ந்த திருமணமாகி குழந்தையுள்ள ஆண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ள நிலையில், அங்கு 33
வயதுடைய பெண் ஒருவரை தான் திருமணம் செய்யவில்லை என தெரிவித்து காதலித்து
வந்துள்ளார்.

பரிதாப நிலை

இந்தநிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.

இதனையடுத்து, அவரை தேடி குறித்த பெண் கடந்த ஜூன் மாதம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு சென்று காதலனை சந்தித்த போது, அவர் ஏற்கனவே திருமணம் செய்து குழந்தைகள் இருப்பதை அறிந்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து, பொலிஸ் நிலையத்தில் பிரச்சினை ஏற்பட, ஏமாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரை அங்கிருந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.

அதன் பின்னர், அங்கு கடமையாற்றிவரும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியைச் சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், ஏமாற்றப்பட்ட பெண்ணின் பிரச்சினையை கேட்டறிந்து, அவரின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு அவரை தனது வீட்டில் தங்க வைத்துள்ளார்.

நீதவான் உத்தரவு

இவ்வாறு 3 தினங்கள் கடந்த நிலையில் ஜூன் 10ஆம் திகதி குறித்த பெண் தான் வீட்டிற்கு போவதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறி பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிற்கு அருகாமையில் ஒளிந்திருந்துள்ளார்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அவரது வீட்டை பூட்டிவிட்டு கதவின் திறப்பை வழமைபோல ஒளித்து வைக்கும் இடத்தில் ஒளித்துவைத்துவிட்டு கடமைக்கு செல்லும்வரை காத்திருந்துவிட்டு, அங்கு சென்று அவர் ஒளித்து வைத்திருந்த கதவின் திறப்பை எடுத்து கதவை திறந்து அங்கிருந்த 9 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளார்.

கடமை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர், வீட்டின் கதவை திறந்தபோது தனது தங்க ஆபரணங்கள் திருட்டுப்போயுள்ளதை கண்டுகொண்ட அவர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்த அதேவேளை திருடிய பெண் 3 மாதங்களாக தலைமறைவாகி வந்த நிலையில் அவரை கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களையும் மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நேற்று (01.10.2024) செவ்வாய்கிழமை மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றில் முன்னிலைபடுத்தியபோது, அவரை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version