Home முக்கியச் செய்திகள் இராணுவத்தால் வரவழைக்கப்பட்ட நபர் சடலமாக மீட்பு : அரச தரப்பு வெளியிட்ட அறிவிப்பு

இராணுவத்தால் வரவழைக்கப்பட்ட நபர் சடலமாக மீட்பு : அரச தரப்பு வெளியிட்ட அறிவிப்பு

0

முல்லைத்தீவு (Mullaitivu) முத்தையன் கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள்
தாக்கப்பட்டமை மற்றும் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படும் என
தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் (M.Jegatheeswaran) தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞர்கள் மீது
தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தப்பி ஓடிய இளைஞர்களில் ஒருவர்
மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று (09)
கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்கு 5 இளைஞர்கள் சென்றதாகவும்,
அவர்கள் இராணுவத்தால் விரட்டப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பொது
மக்கள் தெரிவித்துள்ளதுடன் தப்பி ஓடிய ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும்

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொலைபேசி
ஊடாக உரையாடியதுடன் அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டேன்.

இது தொடர்பில் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மற்றும்
முல்லைத்தீவு சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர், பிரதேச செயலாளர் ஆகியோருடன்
தொலைபேசியில் பேசியிருந்தேன்.

காவல்துறையினர் இது தொடர்பில் நீதியான வகையில்
விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் எமது உயர் மட்ட
அமைச்சர்களுக்கும் இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளேன். அவர்களும் இது
தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர்.

ஆகவே, இச் சம்பவம் தொடர்பில் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணைகளை
மேற்கொண்டு உண்மை தன்மையினை வெளிப்படுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என” தெரிவித்தார். 

நீதிமன்ற உத்தரவு

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ஆறு இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இந்தநிலையில் 3 இராணுவத்தினரை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version