Home இலங்கை அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக வடக்கில் விசேட நடவடிக்கை!

அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக வடக்கில் விசேட நடவடிக்கை!

0
image

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாகாணங்களுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சொகுசுப் பேருந்துச் சேவைகளை முன்னெடுத்து வரும் பேருந்துகளுக்கு எதிராகவும், வடக்கு மாகாணத்திற்குள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகளுக்கு எதிராகவும் விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதற்காக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் 10 பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத பேருந்துச் சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதுடன், சட்டபூர்வமாக சேவையில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர்களுக்கும் அநீதியை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, வடக்கு மாகாணத்திற்குள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளைப் பதிவு செய்து சட்டபூர்வமாக இயக்குவதற்கு ஏற்கனவே போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனிமேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

விசேட நடவடிக்கையின் போது, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து பேருந்துகளை பரிசோதிக்கவுள்ளனர்.

இதன்போது வழித்தட அனுமதிப்பத்திரங்கள் உள்ளிட்ட சட்டபூர்வ ஆவணங்கள் பரிசோதிக்கப்படுவதுடன், உரிய அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே பேருந்துச் சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனிமேல் சலுகை வழங்கப்படமாட்டாது என்றும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/special-operation-in-the-north-against-buses-operating-without-authorization-1786462854

NO COMMENTS

Exit mobile version