Home இலங்கை இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளுக்கு அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளுக்கு அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு

0
image

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) உதவியுடன் மீண்டும் தாயகம் திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான சிறப்பு ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக, இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக குறித்த நபர்களின் இலங்கை அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, அரச புலனாய்வுச் சேவையின் ஒப்புதல் அனுமதி பெறப்பட்ட பின்னர் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன்னர் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது அங்கீகரிக்கப்பட்ட துறைமுகம் ஊடான பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்கு சென்றவர்கள், தங்களுடன் தொடர்புடைய கொலை, தேசத்துரோகம் உள்ளிட்ட பாரிய குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தற்காலிக வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கப்பட்டு நாட்டுக்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவர்.

அதேபோன்று, 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி யுத்தம் முடிவடைந்த காலப்பகுதி வரை முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கும், அடையாளம் மற்றும் புலனாய்வுச் சேவை ஒப்புதல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகளின்றி நாடு திரும்புவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

Source: https://samugammedia.com/governments-happiness-announcement-for-refugees-returning-to-their-homeland-from-india-1786510943

NO COMMENTS

Exit mobile version