Home இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் நளிந்த விளக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் நளிந்த விளக்கம்

0
image

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எந்தவொரு வகையிலும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (11) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, சில தரப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எந்தவொரு தொகையாலும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு குறிப்பிட்டளவு எரிபொருள் வழங்கப்படுவதாகவும், அந்த அளவுக்கேற்ப கொடுப்பனவு கணக்கிடப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2026 மார்ச் 1ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டே மார்ச் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த நடைமுறை ஜூலை 1ஆம் திகதியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஜூலை 1ஆம் திகதி முதல் சந்தையில் நிலவும் எரிபொருள் விலைக்கு ஏற்ப கொடுப்பனவு கணக்கிடப்படும் எனவும், எரிபொருள் விலை குறைந்தால் கொடுப்பனவு குறையும் என்றும், விலை அதிகரித்தால் கொடுப்பனவு அதிகரிக்கும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்தார்.

Source: https://samugammedia.com/salaries-of-parliament-members-have-not-been-increased–minister-gives-brief-explanation-1786511077

NO COMMENTS

Exit mobile version