Home இலங்கை இராணுவ முகாமுக்கு முன் கேப்பாபுலவு மக்கள் போராட்டம்

இராணுவ முகாமுக்கு முன் கேப்பாபுலவு மக்கள் போராட்டம்

0
image

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (05.06.2026) 12வது நாளை எட்டிய நிலையில், இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில், தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுவரை உரிய தீர்வு எட்டப்படாத காரணத்தால், இன்று (05) காலை கேப்பாபுலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பேரணியாக சென்று தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலுக்கு முன்பாக நிறைவு பெற்றிருந்தது. 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதுடன் மக்களின் பயன்பாட்டிற்காக இருந்த பாடசாலை, ஆலயம், தேவாலயம் மற்றும் பொதுமண்டபம் ஆகியவற்றையும் இராணுவம் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவித்து, இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களது சொந்த கிராமங்களில் மீள்குடியேற வழிவகுக்குமாறு அரசாங்கத்திடமும் ஆளுநரிடமும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

பல ஆண்டுகளாக பல்வேறு அரசுகளிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தங்களது காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டனர். தங்களது காணிகளும் பொதுச் சொத்துகளும் முழுமையாக மீள வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

குறித்த போராட்டத்தின் போது எமது நிலம் எமது உரிமை, நிலப்பறிப்பு என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல், இராணுவ நிலைகளினை அரச காணிகளினுள் உடனடியாக நகர்த்துங்கள், இராணுவமே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், எமது வாழ்வாதாரம் எமக்கு வேண்டும், மூதாதையர் பூமி எமக்கு வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்களடங்கிய பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் வி.மணிவண்ணன், மக்கள் போராட்ட முன்னணி உறுப்பினர் (அரகல) ராஜ்குமார் ரஜீவ்காந், அரசியல் செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞா.யூட்சன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன், முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதி நே.சங்கீதன், முன்னாள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், கேப்பாபுலவு மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கின்றது. குறித்த காணிகளை உடனடியாக உரிய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே பாதிக்கப்பட்ட மக்கள் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/people-protest-with-kebabs-in-front-of-the-army-camp-1783253466

NO COMMENTS

Exit mobile version