Home இலங்கை களு கங்கையில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் நீரோட்டத்தில் சிக்கி மாயம்

களு கங்கையில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் நீரோட்டத்தில் சிக்கி மாயம்

0
image

ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யால பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சிராத் சஸ்மித என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (31) மாலை 7.30 மணியளவில் மூன்று நண்பர்கள் குறித்த பகுதிக்கு நீராடச் சென்றுள்ளனர். இதன்போது, அவர்களில் ஒருவர் ஆற்றில் குதித்து நீந்த முயன்ற போது, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

அவரைக் காப்பாற்றுவதற்காக மற்றொரு இளைஞரும் ஆற்றில் குதித்துள்ளதுடன், அவரும் நீரோட்டத்தில் சிக்கியுள்ளார். எனினும், கடும் போராட்டத்துக்குப் பின்னர் அவர் கரையை அடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

களு கங்கையில் நீரோட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதி என்பதால், காணாமல் போன இளைஞரைத் தேடும் நடவடிக்கையில் இன்று (01) காலை பொலிஸ் கடற்படைப் பிரிவின் உயிர் பாதுகாப்பு குழுவினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும், குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதால், தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கரையோரத்தில் தீ மூட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பிரதேசவாசிகள் மற்றும் இளைஞரின் நண்பர்கள் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, ஜா-எல, பமுனுகம – எப்பாமுல்ல கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த 13 வயது சிறுவனின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் (30) பிற்பகல் குறித்த கடற்கரைப் பகுதியில் பெண்ணொருவர் தனது மகள் மற்றும் மேலும் இரு சிறுவர்களுடன் கடலில் நீராடச் சென்றிருந்த நிலையில், இராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பெண்ணின் சடலமும் இரண்டு சிறுமிகளின் சடலங்களும் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காணாமல் போயிருந்த 13 வயது சிறுவனின் சடலமும் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 35 வயதுடைய பெண்ணொருவர், 04 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 13 வயதுடைய சிறுவன் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/a-young-man-who-went-to-bathe-with-friends-in-the-kalu-ganga-went-missing-after-getting-caught-in-the-current-1788240624

NO COMMENTS

Exit mobile version