Home இலங்கை கேகாலையில் புலமைப்பரிசில் பரீட்சை சர்ச்சை – அதிகாரிகள் விசாரணை

கேகாலையில் புலமைப்பரிசில் பரீட்சை சர்ச்சை – அதிகாரிகள் விசாரணை

0
image

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்ற பரீட்சை நிலையம் ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகள் பரீட்சைத் திணைக்களத்தின் ஊடாக  முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சம்பவம் தொடர்பில் உரிய வலயக் கல்வி பணிமனை மட்டத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேகாலையில் உள்ள பரீட்சை நிலையம் ஒன்றில், 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது மாணவர்களுக்கு வினாத்தாள் 15 நிமிடங்கள் தாமதமாக வழங்கப்பட்டதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனினும், வினாத்தாள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்குப் பின்னரும், மாணவர்களிடமிருந்து வினாத்தாள் உரிய நேரத்திலேயே மீளப் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அநீதி ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கூறி, சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னதாக வலியுறுத்தியிருந்தது.

மாணவர்களுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பாதிப்பு தொடர்பில் உரிய கவனம் செலுத்தி, அவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலும் அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Source: https://samugammedia.com/scholarship-exam-controversy-in-kegalle–officials-investigate-1786361313

NO COMMENTS

Exit mobile version