Home இலங்கை செப்டம்பர் 12 போராட்டத்தை தடுக்க முடியாது – இந்திக அனுருத்த

செப்டம்பர் 12 போராட்டத்தை தடுக்க முடியாது – இந்திக அனுருத்த

0
image

அநுராதபுரம் சல் காது அரங்கத்தில் எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்ப்பு பேரணியைத் தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும், சல் காது அரங்கம் வழங்கப்படாவிட்டாலும், அநுராதபுரத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் குறித்த போராட்டம் நிச்சயமாக நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் பிரதான அரசியல் சக்தியாக எதிர்க்கட்சி செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தியே அநுராதபுரத்தில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அநுராதபுர மாவட்ட விவசாயிகள் உரம் உள்ளிட்ட தேவையான வளங்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வறட்சியான காலநிலையால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சல் காது அரங்கத்தை கோரியதாகவும், எனினும் சட்ட விதிமுறைகளை காரணம் காட்டி அந்த மைதானத்தை வழங்க அரசாங்கம் மறுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வளர்ச்சி தொடர்பில் அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே கட்சி உறுப்பினர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்து அடக்குமுறைகளை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும் இந்திக அனுருத்த குற்றம்சாட்டினார்.

அதேவேளை, 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில், இது நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பது தொடர்பில் மக்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றாலும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் நிலவும் சூழலில் அரசாங்கம் குறுக்கு வழியில் தனது தேவைகளை நிறைவேற்ற முயற்சிப்பதையே மக்கள் எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, நாட்டின் உயர்ந்த நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும் களங்கம் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த வலியுறுத்தினார்.

Source: https://samugammedia.com/the-september-12-protest-cannot-be-stopped–hindik-anuruth-1788341128

NO COMMENTS

Exit mobile version