Home இலங்கை செம்மணி புதைகுழி உண்மைகளை மறைக்கச் சொன்னாரா சந்திரிக்கா? விசாரிக்குமாறு ரவிகரன் எம்.பி. கோரிக்கை

செம்மணி புதைகுழி உண்மைகளை மறைக்கச் சொன்னாரா சந்திரிக்கா? விசாரிக்குமாறு ரவிகரன் எம்.பி. கோரிக்கை

0
image

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சோமரத்ன ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை தமது பூர்வீக காணிவிடுவிப்பிற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர நேரில் சந்தித்துக் கலந்துரையாட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.  

 

நாடாளுமன்றில் இன்று (08) உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினரால் மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்னிடம் கேட்டுக்கொண்டதாக தகவல்களை சோமரத்ன ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளார்.

அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளேவினால் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மூலம் கடிதம் ஒன்று தமக்கு அனுப்பி வைத்திருந்ததாகவும், அந்தக் கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவே அனுப்பிவைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனிதப் புதைகுழி தொடர்பில் எதனையும் கூறவேண்டாமெனவும், பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

எனவே சோமரத்ன ராஜபக்ச வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றுதான் செம்மணியோடு சார்ந்த மக்கள் எல்லோரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

செம்மணி மனிதப்புதைகுழியுடன் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைதுசெய்யப்பட வேண்டும். அவர்களுக்கெதிராக மிகக்கடுமையான நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இவ் உயரிய சபையின் ஊடாகக் கேட்டுக்கொள்கின்றேன். 

அத்தோடு  கடந்த 5,6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் மற்றுமொருமுறை அரசின் காவல் கட்டமைப்பின் தரநிலையை உலகுக்கு வெளிப்படுத்தி இருக்கிறது.

இதற்கு முன்னரும் இலங்கையின் சிறைகளில் கலவரங்கள் நடந்திருக்கின்றன. அரசே முன்னின்று அரசே திட்டமிட்டு முன்னகர்த்தி, அரசே துணை நின்று அரங்கேற்றிய சிறைக்கலவரங்களில் இருந்து மேற்படி 2026-யூலை நீர்கொழும்பு சிறைக்கலவரம் வேறுபட்டு நிற்கிறது.

1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள கைதிகளால் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டனர்.

வெவ்வேறான இரண்டு நாள்களில் 35பேர், 18பேர் என தமிழ் அரசியல் கைதிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டமை தமிழர் மீது இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புத்தாக்குதலாகவே கருதப்படுகிறது.

நீதிமன்றில் மரணதண்டனை விதிக்கப்படும் போது, தனது இறுதி ஆசையை குட்டிமணி இவ்வாறு விபரித்தார்.

“எனது மரண தண்டனையை நிறைவேற்ற முன் என் கண்களை எடுத்து பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்கமுடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்”

சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தப்பிப்பிழைத்தவர்களின் வாக்குமூலங்கள் சான்றுப்படுத்தின. 

அப்போதைய அரசின் கட்டமைப்புகள் சிறைக்கலவரங்களையும் சிறைகளில் படுகொலைகளையும் முன்னின்று நடாத்தியதற்கு காலவெளியில் எண்ணற்ற சான்றுகள் காணப்படுகின்றன.

பிந்துனுவேவா புனர்வாழ்வு முகாம் இதற்கு மற்றொரு சான்று. அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் 27 பேர் 2000.10.25 அன்று கொல்லப்பட்டனர். 14 இளைஞர்கள் காயமுற்றனர். சம்பவ தினத்திற்கு முதல் நாள் “புலிக்குட்டிகளின் சதைகளை எங்கள் நாய்களுக்குப் போடுவோம்” என சிங்களத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் முகாமைச்சுற்றி பல இடங்களில் காணப்பட்டதாகவும் குறித்த தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் எனவும் பிந்தினுவேவா படுகொலைகளுக்கு பொலிசாரே பதில் கூறவேண்டும் எனவும் சிலுமின என்ற சிங்களப் பத்திரிகையே செய்தியை வெளிக்கொணர்ந்திருந்தது.

முன்னைய காலங்களில் அரச கட்டமைப்புகளால் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இத்தகைய சிறைக்கலவரங்கள் இன்று அதே அரச கட்டமைப்பின் மனித நேயமற்ற, வினைத்திறனற்ற காவல் கட்டமைப்பை உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது.

வெலிக்கடையிலும் பிந்துனுவேவாவிலும்  களுத்துறையிலும் தமிழர்கள் என்ற நிலையில், கிட்டாத நீதி நீர்கொழும்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிட்டட்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.

 

மேலும் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கமாறு வலியுறுத்தி இன்றோடு 15ஆவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி காணி விடுவிப்பை வலியுறுத்தி அந்த மக்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக கேப்பாப்பிலவில் 55 குடும்பங்களுக்குரிய 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளும் 04 குடும்பங்களுக்குரிய 100 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக மொத்தம் 59 குடும்பங்களுடைய 159.5 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள குறித்த பகுதிக்குள் பாடசாலை, பொதுநோக்கு மண்டபம், கோயில், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. தென்னை, மா, பலா, பனை, வேம்பு உள்ளிட்ட பயன்தரு மரங்களும் காணப்படுகின்றன.

மக்களுடைய பெருமளவான கால்நடைகளை இராணுவத்தினர் அந்தப் பகுதிக்குள் அபகரித்து வைத்திருப்பதாகவும், பால் உற்பத்தியை பெறுவதாகவும் மக்களால் எம்மிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமது வளங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர் இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்வதுடன், நந்திக்கடல் வாழ்வாதார வளத்தினை பயன்படுத்திக்கொள்ள முடியாதவாறு இராணுவத்தினர் முடக்கிவைத்திருப்பதாகவும் மக்களால் எம்மிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளதாக அறிய முடிகின்றது. அவ்வாறு வருகை தருகின்ற பாதுகாப்பு பிரதி அமைச்சர் காணி விடுவிப்பை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களைச் சந்தித்துக் கலந்துரையாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன். என குறிப்பிட்டுள்ளார்.

Source: https://samugammedia.com/did-chandrika-tell-semmani-pudaikuzhi-to-hide-the-facts-mp-ravikaran-requests-an-investigation-1783518291

NO COMMENTS

Exit mobile version