தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, 2026 ஜூலை 13 முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி ‘நீர் விநியோக துண்டிப்பு வாரமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விசேட நடவடிக்கை பிரதானமாக சில குறிப்பிட்ட பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையான அனைத்துப் பகுதிகள், மகரகம மற்றும் கோட்டை வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த திட்டம் அமுலாகவுள்ளது.
தங்களுடைய நீர் விநியோகம் தடையின்றித் தொடர்வதற்கு, நீர் கட்டண நிலுவைகளை 2026 ஜூலை 13 ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்தி முடிக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாக நிலுவைத் தொகைகளைச் செலுத்துவதன் மூலம், ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்த்து ஒத்துழைப்பு வழங்குமாறும் நீர் வழங்கல் சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் நீண்டகாலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்காக, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக, வரலாற்றில் அதிகூடிய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டை 2027ஆம் ஆண்டில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், ஒரே நோக்கத்துடன் பல்வேறு அமைச்சுகளின் கீழ் இயங்கும் நிறுவனங்களினால் ஏற்படும் செயற்திறன் குறைபாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, உற்பத்தித்திறன் அற்ற நிறுவனங்களை மறுசீரமைக்க அல்லது நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கண்டி வடக்கு ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம், கொழும்பு பெரும்பாக கழிவுநீர் முகாமைத்துவத் திட்டம், அம்பத்தலே நீர் வழங்கல் திட்டம் மற்றும் அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பகுதியளவில் நிறைவடையாத வீடுகளுக்கான உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.
Source: https://samugammedia.com/a-special-program-to-clear-water-bill-arrears-next-week-1783521499
