தம்பதீவம் மற்றும் தாய்லாந்துக்கு மேற்கொள்ளப்படும் மத யாத்திரைகளைத் தடை செய்ய தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான எந்தவொரு கருத்தையோ அல்லது அறிவிப்பையோ அமைச்சர் வெளியிடவில்லை என்றும், சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களுக்கு எந்தவித உண்மையும் இல்லை என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட சில தரப்பினர் இலங்கையின் சமூக, அரசியல் மற்றும் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் நோக்கில் போலியான செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ பகிரவோ வேண்டாம் என்றும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் நம்புமாறும் தொழிலாளர் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
