“தங்களின் அரசு வீழ்ச்சியடையப் போகின்றது என்று தெரிந்தும், தங்களை மாபெரும் பலசாலிகள் எனக் கூறிக்கொண்டு நாடாளுமன்றிலும் வெளியிலும் வீணாகக் கூச்சலிடும் கோமாளிகளாலேயே கடந்த காலங்களில் ஆட்சிகள் கவிழ்ந்தன” என்று எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தற்போதைய அரசின் செயல்பாடுகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகள் குறித்து இவ்வாறு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அரச தரப்பினரின் தற்போதைய போக்கு குறித்து அவர் மேலும் பேசுகையில்,
“எங்களுடைய அரசு வீழ்ச்சியடையும் கடைசித் தருணத்திலும்கூட, தங்களைச் சர்வ வல்லமை படைத்தவர்களாக நினைத்துக்கொண்டு இப்படியான சில கோமாளிகள் எம்மோடு இருந்தார்கள். அவர்களின் தவறான வழிகாட்டல்களாலேயே அன்று எமது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அதேபோன்றதொரு துரதிர்ஷ்டவசமான சூழல்தான் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசிலும் அரங்கேறி வருகின்றது. தற்போதும் அத்தகைய கோமாளிகளே இந்த அரசுக்குள்ளும் நிறைந்திருக்கின்றார்கள். அவர்கள் எங்களை நோக்கி எவ்வளவு வேண்டுமானாலும் கூச்சலிடட்டும், திட்டட்டும், நாங்கள் அனைத்தையும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். உங்களின் சவால்களுக்கு எவ்வாறு முறையான பதிலடி கொடுப்பது என்பதை மிக விரைவில் நாங்கள் உங்களுக்குக் கற்றுக் கொடுப்போம்.” – என்று எச்சரித்தார்.
தொடர்ந்து நாட்டில் நிலவும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்துப் பேசிய அவர்,
“இன்று நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமை என்னவென்றால், ஒட்டுமொத்த வணிகத் துறையும் தற்போது முற்றாகச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த நாட்டில் இயங்கும் பெரும்பான்மையான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக நடவடிக்கைகளுக்கும், பாரிய தொழிற்சாலைகளுக்கும் எரிபொருளும் எண்ணெயும் மிக அத்தியாவசியமான மூலப்பொருட்களாகும்.
அவ்வாறானதொரு இக்கட்டான நிலையில், உலகச் சந்தையைக் காரணம் காட்டி உள்நாட்டில் எரிபொருள்களின் விலையைத் தொடர்ந்து அதிகரிப்பதன் மூலம், நலிவடைந்து வரும் இந்தத் தொழில்துறைகளுக்கும் அதனை நம்பியுள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும் தற்போதைய அரசு வழங்கும் தீர்வு அல்லது மாற்றுப் பலன் என்ன?” – என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
