புதிய அரசமைப்பொன்றின் ஊடாகவே நீதியரசர்களின் பதவிக்காலத்தைத் திருத்தம் செய்ய முடியும். அவ்வாறன்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மாத்திரம் பதவிக்காலத்தை நீட்டிப்பது முறையற்ற செயலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதித்துறையை அரசியல் மயமாக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. நீதிமன்றக் கட்டமைப்பில் தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும். கீழ் நீதிமன்றங்களில் வெற்றிடங்கள் நிலவுவதால், உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நியமனங்களை வழங்க வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி கூறுவது முற்றிலும் தவறானது. நீதியரசர்களின் நியமனங்களைத் தாமதப்படுத்துவதால், தகுதியுள்ள பல நீதிபதிகளின் பதவி உயர்வுகள் தடுக்கப்படுகின்றன.
உயர் நீதிமன்றத்துக்கு நியமனம் பெறும் தகுதியுள்ளவர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலேயே ஓய்வுபெறும் துரதிர்ஷ்டவசமான நிலை கடந்த காலங்களிலும் காணப்பட்டது. தற்போதைய அரசு அரசமைப்புத் திருத்தம் ஒன்றின் மூலம் பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்க முயற்சிக்கின்றது. அதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம்.
இதேவேளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் தனக்குரிய பொறுப்புகளைத் தட்டிக்கழித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்த தனது கடமையை நிறைவேற்ற அவர் தவறியுள்ளார். இதன் காரணமாகவே நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிக்கத் தீர்மானித்தோம். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
