மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பூர்வாங்க விசாரணைகளில் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் சாட்சியமளித்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக காணாமல் போனோர் அலுவலகத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஜெ. தற்பரன் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகமும் நீதி அமைச்சும் இணைந்து நடத்தும் இந்த விசாரணைகள் இரண்டாவது நாளாகவும் இன்று மட்டக்களப்பு மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டன.
காணாமல் போனோர் தொடர்பாக உறவினர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில், அவர்களிடமிருந்து சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று மண்முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதனுடன், வவுணதீவு மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெ. தற்பரன், 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட பூர்வாங்க விசாரணைகள் அமைச்சரவை அனுமதியுடன் சிறப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், முதல் நாளில் 233 பேரும், இரண்டாவது நாளில் 203 பேரும், இன்றைய தினம் இதுவரை 150 பேரும் சாட்சியமளித்துள்ளதாகவும், மூன்று நாட்களில் மொத்தமாக 600-க்கும் மேற்பட்டோர் தங்களது வாக்குமூலங்களையும் சாட்சியங்களையும் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், விசாரணைக்கு வருகை தரும் பலர் காணாமல் போனோருக்கான இறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை ஏற்கனவே பெற்றிருந்தாலும், இறப்புக்கான காரணங்கள் மற்றும் காணாமல் போன சூழ்நிலைகள் தொடர்பான துல்லியமான தகவல்களை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதால், ஒவ்வொரு வழக்கையும் ஆராய்வதற்கு எதிர்பார்த்ததை விட அதிக நேரம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விசாரணைகள் காணாமல் போனோரின் உறவினர்களின் முறைப்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
