கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவொன்று இன்று (01) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து மதுபான விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு, சட்டத்துக்கு முரணாக விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மதுபான போத்தல்கள் அடங்கிய பல பெட்டிகளை பறிமுதல் செய்துள்ளது.
விசேட பொலிஸ் குழுவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களில் குறிப்பிடத்தக்க அளவு மட்டக்களப்பிலிருந்து விநியோகிக்கப்படுவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து, மாவட்டத்தில் உள்ள பல மதுபான விற்பனை நிலையங்கள் குறிவைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஐந்து மதுபான விற்பனை நிலையங்களில் இருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மதுபான போத்தல்கள் அடங்கிய பெட்டிகள் கைப்பற்றப்பட்டதாக விசேட பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுவரி திணைக்களம் முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
