யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் அமைந்துள்ள சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தற்போது பல ஏக்கர் பரப்பளவிலான சவுக்கம் காடு தீப்பற்றி எரிந்து வருகிறது.
தீயை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், முழு சவுக்கம் காடும் தீயில் எரிந்து நாசமாகும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தீயை கட்டுப்படுத்தி சவுக்கம் காட்டை பாதுகாக்க வேண்டும் என பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது அப்பகுதி கிராம மக்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், தீ வேகமாக பரவி எரிந்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், தீ மேலும் பரவுவதற்கு முன்னர் தீயணைப்பு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
