Home இலங்கை மன்னாரில் நூற்றுக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம் – சேவைகள் ஸ்தம்பிதம்

மன்னாரில் நூற்றுக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம் – சேவைகள் ஸ்தம்பிதம்

0
image

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களது சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கோரி, இன்று (31) திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பை உடனடியாக அமுல்படுத்துதல், சேவை மற்றும் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக காலை 10 மணியளவில் சுகயீன விடுமுறை போராட்டத்திலும் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தங்களது நீண்டகால கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்குமாறு வலியுறுத்தினர்.

மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை நிலை, பதவி உயர்வு, சம்பள நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தில் மன்னார் மாவட்ட அரச திணைக்களங்களில் கடமையாற்றும் பல நூற்றுக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பில் ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜர், மன்னார் மாவட்ட அரச அதிபர் க. கனகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, அரச திணைக்களங்களில் அவர்கள் முன்னெடுக்க வேண்டிய பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு, சில சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Source: https://samugammedia.com/hundreds-of-development-officers-protest-in-mannar—services-paralyzed-1788162459

NO COMMENTS

Exit mobile version